முன்னெச்சரிக்கைகளுக்கு இன்னும் தயாராக முடியாத நிலையிலுள்ளோம்: எதிர்க்கட்சித்தலைவர்
சுனாமியால் நாடு பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அதனை அடிப்படையாகக் கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் எடுக்க முடியாத நிலைமையே காணப்படுகிறது.
அரசாங்கம் அறிவித்த நிவாரணங்கள் இன்னும் மக்களை முறையாக சென்றடையவில்லை. எமது கள விஜயங்களின் இதனை அறிய முடிகிறது. சுனாமியால் நாடு பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அதனை அடிப்படையாகக் கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் எடுக்க முடியாத நிலைமையே நாட்டில் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
யட்டியந்தோட்டை, கரவனெல்ல பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமைகளை பார்வையிட சென்ற வேளையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு வழங்கப்படக் கூடிய உச்சபட்ச நிவாரணம் மற்றும் உதவிகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். வீடுகளை தூய்மைப்படுத்தி, சேதமடைந்த வீடுகளை சீரமைத்து, குழந்தைகளைப் பராமரத்து, வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடி உதவிகளை வழங்கப்பட வேண்டும். ஆனால் அரசாங்கம் அறிவித்த இந்த நிவாரணங்கள் மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பதை எனது கள விஜயங்களின் போது அறிய முடிகின்றன.
இவ்வாறான சூழலில் திட்டமிட்டபடி உதவி பெற வேண்டியவர்களுக்கு அந்த உதவி போய் சேராத நிலைமைகளே காணப்படுகின்றன. எனவே அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டும். உதவி வழங்கப்படுவதாக விளம்பரம் செய்வது போல் அந்த உதவி உண்மையில் மக்களைச் போய்ச்சேர வேண்டும். நாட்டில் ஆபத்தான வானிலை நிலைமை உருவாகி வருவதாக கடந்த 11ஆம் திகதி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதனை மறுக்க முடியாது. காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பின்னர் அது புயலாக உருவெடுக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிக்கும் போது, அதனைக் கருத்தில் கொண்டு இடர் முகாமைத்துவ நிலையம் முன்னாயத்த பணிகளை ஆரம்பித்திருக்க வேண்டும். அவ்வாறு செயற்பட்டிருந்தால் மக்கள் மீது ஏற்படும் பாதிப்புக்களையும், அழுத்தங்களையும் குறைத்திருக்க முடியும்.
உயிர்களை காப்பாற்றுவதற்கும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முடிந்திருக்கும். அனர்த்தம் வரப்போவதாகத் தெரிந்திருந்தும், இடர் முகாமைத்துவ நிலைய பொறிமுறை செயலிழந்துள்ளது. சுனாமியால் நாடு பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அதனை அடிப்படையாகக் கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் எடுக்க முடியாத நிலைமையே காணப்படுகிறது.
எந்தவொரு பேரிடருக்கும் பின்னும் அரசியல்வாதிகள் அதனைப் பொறுப்பேற்க வேண்டும். இக்கட்டான காலங்களில் ஓடி ஒழியாமல் யதார்த்தத்துக்கு முகம் கொடுக்க வேண்டும். பொறுப்பை அதிகாரிகள் மீது சுமத்தாமல் இருப்பதும் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகிய கொள்கை வகுப்பாளர்களின் பொறுப்பாகும். அதேபோல், இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் மிகவும் தாமதமாகச் செய்து வருகிறது.
அரசாங்கம் தற்போது குறைநிரப்பு பிரேரணையொன்றை சமர்ப்பித்துள்ளது. இதனை நாம் முன்னரே வலியுறுத்தியிருந்தோம். நாடு முகம்கொடுத்திருக்கும் நிலைமைகளை எடுத்துக்காட்டி சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுமாறு நாம் பல முறை கோரிக்கை விடுத்து வந்தோம். நாம் கூறிய ஒவ்வோரு சந்தர்ப்பங்களிலும் அதனைப் புறக்கணித்து விட்டு, இப்போது அரசாங்கம் நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. நிபந்தனை எவ்வாறு தளர்த்திக் கொள்வது என்பது குறித்து பேசப்படுகிறது.
இதனை நாம் ஏந்கனவே அறிவித்திருக்கின்றோம். நிலைமைகளை கையாளும் விடயத்தில் அரசாங்கம் இன்னும் செயற்றிடனோடு நடந்து கொள்ள வேண்டும். மக்கள் பக்கம் நின்று, நாடு குறித்த சரியான நிலைப்பாட்டை அறிந்து அரசாளுகைக்கு நாம் சரியானதையே சொன்னோம். நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நிபந்தனைகளை தளர்த்தி மக்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். அரசாங்கத்தை விட ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்களே முக்கியமானவர்கள்.
யார் தடையாக இருந்தாலும், எந்த வரம்புகளையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு உதவ எதிர்க்கட்சி பாடுபடும். எனவே ஆணவம் கர்வத்தை விடுத்து சரியான நிலைப்பாடுகளை எடுத்து பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை நமது சொந்த பிரச்சினைகளாகக் கருதி தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.





