வெனிசுவேலா மக்களின் இறையாண்மையை முன்னறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணுங்கள்: வெளிவிவகார அமைச்சு
வெனிசுவேலா மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை என்பவற்றுக்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.
வெனிசுவேலா மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு, உரிமைகள் மற்றும் இறையாண்மையைக் கருத்திற்கொண்டு, தற்போது நிலவும் பதற்ற சூழ்நிலைக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் முன்னுரிமை அளிக்கவேண்டும் என வெளிவிவகார அமைச்சு அழைப்புவிடுத்துள்ளது.
வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட இராணுவத் தலையீட்டை வன்மையாகக் கண்டிப்பதாகவும், தமது ஆட்சியாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் வெனிசுவேலா மக்களின் இறையாண்மையை மீறுவதற்கு எந்தவொரு வல்லரசுக்கும் உரிமை இல்லை எனவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் விடுதலை முன்னணியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெனிசுவேலா நிலைவரம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
வெனிசுவேலாவின் சமீபத்திய நிலைமைகள் குறித்து நாம் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதுடன், அச்சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றோம்.
பலப்பிரயோகத்தைத் தடை செய்தல், தலையிடாமை, சர்வதேச மோதல்களை அமைதியான முறையில் தீர்த்தல், அரசுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு போன்ற சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கொள்கைகளை மதிக்கவேண்டியதன் அவசியம் ஆகியவற்றை நாம் வலியுறுத்துகின்றோம்.
வெனிசுவேலா மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை என்பவற்றுக்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. அத்தோடு பதற்றத்தைக் குறைப்பதுடன், இவ்விவகாரத்துக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு சகல தரப்பினருக்கும் அழைப்புவிடுக்கின்றோம்.
இந்த முக்கியமான கட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை போன்ற ஏனைய கட்டமைப்புக்களும் இவ்விவகாரத்தை உரியவாறு கையாண்டு, வெனிசுவேலா மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு, உரிமைகள் மற்றும் இறையாண்மையைக் கருத்திற்கொண்டு, அமைதியான தீர்வை அடைந்துகொள்வதை இலக்காகக்கொண்டு செயற்படுவது அவசியமாகின்றது.





