அரசாங்க அலட்சியமே அனர்த்தத்துக்கு காரணம்: நளின் பண்டார எம்.பி.
அரச அதிகாரிகளின் சுயாதீனத்தன்மை இல்லாதொழிக்கப்பட்டுள்ளதால் அரச அதிகாரிகள் சிறந்த முறையில் செயற்படவில்லை. இதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்.
அரசாங்கத்தின் அலட்சியத்தால் தான் அனர்த்தத்தின் போது உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்கள் தீவிரமடைந்துள்ளன. ஆகவே இது குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழுவொன்றை நியமிக்க வேண்டும். அதேபோல் நெருக்கடியான நிலையின் போது நீர்பாசனத்துறை திணைக்களம் செயற்பட்ட விதம் குறித்து ஆராய குழு ஒன்றை நியமிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 05-12-2025அன்று நடைபெற்ற 2026 வரவு,செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அனர்த்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. அதேபோல் அரச அதிகாரிகளின் சுயாதீனத்தன்மை இல்லாதொழிக்கப்பட்டுள்ளதால் அரச அதிகாரிகள் சிறந்த முறையில் செயற்படவில்லை. இதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்.
அனர்த்த நிலைமை குறித்து வளிமண்டல திணைக்களம் விடுத்த முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை. அவற்றை அலட்சியம் செய்து தன்னிச்சையாகவே செயற்பட்டது. ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்.
அரசாங்கத்தின் பலவீனத்தன்மையை வெளிப்படுத்திய ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகிறது. இது முற்றிலும் தவறானது. ஆகவே தவறை ஏற்றுக்கொண்டு அவற்றை திருத்திக் கொள்ள முயற்சியுங்கள்.
அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது என்று கிராம மக்கள் குறிப்பிடுகிறார்கள்.இதனால் தான் ஆளும் தரப்பினர் அனர்த்த நிலையில் போது மக்கள் மத்தியில் செல்லவில்லை. ஆளும் தரப்பினர் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை போன்று தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கும் நிவாரணங்களை தூக்கிச் சென்று அவற்றை பொது மக்களுக்கு விநியோகிக்கிறார்கள்.
தற்போதைய நெருக்கடியான நிலையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர மக்களின் தொழிற்றுறையை பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தின் அலட்சியத்தால் தான் உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்கள் தீவிரமடைந்துள்ளன. ஆகவே இது குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழுவொன்றை நியமிக்க வேண்டும். அதேபோல் நெருக்கடியான நிலையின் போது நீர்பாசனத்துறை திணைக்களம் செயற்பட்ட விதம் குறித்து ஆராய குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றார்.





