எரங்கா குணசேகர, ஜகத் மனுவர்ணா உள்ளிட்ட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
மேலதிக நீதவான் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி பிணை உத்தரவாத அதிகாரிகளுக்கு அறிவித்தல் அனுப்பியதோடு வழக்கை 2026 டிசம்பர் 4 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.
பிரதி நகர அபிவிருத்தி அமைச்சர் எரங்கா குணசேகர, பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் கொண்டு வந்து முன் நிறுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது பிணையில் வெளியே வந்துள்ள ஆறு குற்றம் சாட்டப்பட்டவர்கள், போராட்டங்களில் பங்கேற்றதாகவும், நீதிமன்ற உத்தரவை மீறி சட்டவிரோத கூட்டத்தில் உறுப்பினர்களாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரதியமைச்சர் எரங்கா குணசேகர, பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண, ரொஷான் அலி தனிஸ் அலி, அமல் சாலிந்த என்கிற இராணுவ அமில, உதயங்ககுமார மற்றும் வணக்கத்திற்குரிய கொஸ்வத்த மகாநாம தேரர் ஆகியோருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலதிக நீதவான் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி பிணை உத்தரவாத அதிகாரிகளுக்கு அறிவித்தல் அனுப்பியதோடு வழக்கை 2026 டிசம்பர் 4 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலலிகே, ருஹுன பல்கலைக்கழக மாணவர் சங்க அமைப்பாளர் அந்தோனி வெரங்க புஷ்பிக டி சில்வா, ஜெஹான் அப்புஹாமி மற்றும் வணக்கத்திற்குரிய ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் உள்ளிட்ட 13 பேர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள்.





