உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையை வெளிப்படுத்துவோம்: அமைச்சர் நிஷாந்த அபேசிங்க
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் உண்மையை நிலைநாட்டுவோம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்போம் என்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம். உண்மை வெளிவந்த நிலையில் உள்ளன.நீதிமன்றத்தின் ஊடாக பல விடயங்கள் வெளிப்படுத்தப்படுமென விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நிஷாந்த அபேசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, நீதித்துறைக்கு அச்சுறுத்தல், சுயாதீனத்துக்கு பாதிப்பு என்று எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தான் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். நீதிமன்ற கட்டமைப்பு தற்போது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது.இதுவரை காலமும் கோப்புக்கள் ஊடாக செயற்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் தற்போது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் பயனடைந்துள்ளார்கள்.
நீதிமன்ற கட்டமைப்பில் நிலுவையில் 11 இலட்சத்துக்கும் மேலான வழக்குகள் காணப்படுகின்றன. டிஜிட்டல் மயப்படுத்தல் ஊடாக வழக்கு விசாரணைகள் இலத்திரனியல் மயமாக்கப்பட்டு விரைவுப்படுத்தப்படும். வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காகவே நீதிபதிகளின் பதவிக் காலத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் எவ்வித முரண்பாடும் கிடையாது. தமது ஊழல் வழக்கு விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும், சிறைச்செல்ல நேரிடும் என்ற அச்சத்தில் தான் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் உண்மையை நிலைநாட்டுவோம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்போம் என்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம். உண்மை வெளிவந்த நிலையில் உள்ளன.நீதிமன்றத்தின் ஊடாக பல விடயங்கள் வெளிப்படுத்தப்படும். இருவருக்கு தற்போது நீதிமன்றம் தண்டனைத் தீர்ப்பை அறிவித்துள்ளது.இது முடிவல்ல, தொடர்ச்சி என்றார்.





