ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து அரசு உத்தியோக பூர்வ அறிவிப்பை விட வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர்
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் உட்பட பல்வேறு சட்டங்களின்படி, ஒரு நாட்டின் கடல் எல்லைக்குள் நடவடிக்கை மேற்கொள்ளும் முறை குறிப்பிடப்பட்டுள்ளன.
ஈரானியக் கப்பல் மீதான தாக்குதல் எமது இறையாண்மையை மீறும் செயல் அதனால் இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் தெளிவான உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 05-03-2026 அன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், காலி துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பு அருகில் இந்தியப் பெருங்கடலில் கிட்டத்தட்ட 40 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய கடற்படை கப்பலை, வெளிநாட்டு அரசின் தலையீட்டின் மூலம் வெளிநாட்டு அரசால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்கு மூழ்கிய கப்பலில் இருந்தவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் முயற்சிகளுக்கு நாம் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விடயத்தில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருவதனால், அரசாங்கம் உத்தியோகபூர்வ கருத்தை முன்வைத்து விசேட அறிக்கையை வெளியிட வேண்டும்.
இந்த தாக்குதலை டார்பிடோ எனப்படும் நீரில் செல்லும் ஏவுகணை வைத்து நீர்மூழ்கிக் கப்பல் நேற்று தாக்கி அழிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமையினால், இது தொடர்பாக அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும்.
இந்தத் தாக்குதல் நடந்த குறிப்பிட்ட இடம் நமது கடல் எல்லைக்குள்ளோ அல்லது பொருளாதார மண்டலத்திற்குள்ளோ சம்பந்தப்பட்டதா என்பது குறித்தும், அரசாங்கம் எடுத்த இராஜதந்திர பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. இது குறித்து அரசாங்கம் தெளிவான அறிவிப்பொன்றை வெளியிட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் உட்பட பல்வேறு சட்டங்களின்படி, ஒரு நாட்டின் கடல் எல்லைக்குள் நடவடிக்கை மேற்கொள்ளும் முறை குறிப்பிடப்பட்டுள்ளன. நாட்டின் இறையாண்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் மட்டுமல்ல பாராளுமன்றத்தினும் கடமையும் கூட, நாட்டின் இறையாண்மை மற்றும் ஆள்புல ஒருமைப்பாடு தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய பாரியதொரு நிலைமை உருவாகியுள்ளது. இவ்வாறானதொரு கப்பல் அழிக்கப்பட்டமை குறித்து அரசாங்கம் அறிந்திருந்தும் சபைக்கு அறிவிக்காதது, பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியலமைப்பு ரீதியான பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு தடையாக அமைந்து காணப்படுகிறது
ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 2.1 பிரிவின்படி அனைத்து நாடுகளின் சுதந்திரமும் சமத்துவமும் எல்லா நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட மாநாட்டின் 19 மற்றும் 20 ஆம் பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதில் போர் பயிற்சிகளில் ஈடுபடுவது, கடலோர நீர்ப்பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்குவது ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் கையெழுத்திட்ட நாடாக நாமும் அரசாங்கம் சார்பில் இச்சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கையை வெளியிட வேண்டும்.
சிஎன்என், பிபிசி, அல் ஜஸீரா ஆகிய ஊடகங்கள் நீர்மூழ்கிக் கப்பல் வழியாக டார்பிடோ தாக்குதல் நடந்ததாக சர்வதேச ஊடகங்கள் கூறும்போது, நமது நாட்டின் பாதுகாப்பு அமைச்சு அத்தகைய சம்பவம் நடைபெறவில்லை என்று கூறுகிறது.
அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளரே அத்தகைய நீர்மூழ்கிக் கப்பல் மூலம் டார்பிடோ தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறும்போது, அரசாங்கம் இந்த கேள்விகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிக்கை வெளியிட வேண்டிய தேவை காணப்படுகின்றது.
தற்போது காலி - கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஈரானிய பிரஜைகளின் சடலங்களை வைப்பிலிடுவதற்கு 40 அடி கொள்கலன் வாகனங்களை வைத்தியர்கள் கோரியுள்ளனர். இலங்கை கடற்பரப்பில், கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மற்றுமொரு ஈரானியக் கப்பல் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அரசாங்கம் இது குறித்துக் கவனம் செலுத்த வேண்டும். எமது நாட்டின் கடற்பரப்பில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து அரசாங்கம் அறியாமல் இருப்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்.
தேசிய பாதுகாப்பு குறித்து வகுப்பு நடத்த மேசையும் நாற்காலியும் எடுத்து வாருங்கள், பாடம் நடத்துகிறேன்" என்று கூறிய அமைச்சர்கள் இருக்கும் இந்த ஆளும் தரப்பில், நமது நாட்டின் கடல் எல்லைக்கு அருகிலும் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திலும் நடக்கும் நிகழ்வுகளை அறியாமல் இருப்பது வியப்பான விடயமாகும் என்றார்.





