முன்னாள் அமைச்சர் ஜயகொடி மோசடியில் ஈடுபடவில்லை - அரசாங்கம்
நம்பிக்கையில்லா பிரேரணையில் குறித்த நிலக்கரி இறக்குமதியில் அமைச்சர் எவ்வாறான மோசடியில் ஈடுபட்டார் என்று எதிர்க்கட்சியினர் தெளிவாக குறிப்பிடவில்லை.
தரமற்ற நிலக்கரி கொள்வனவு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடி தலையிடவில்லை. அவர் மோசடியில் ஈடுபடவில்லை என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறோம். இதுவரை காலமும் ஊடக சந்திப்புக்களை நடத்தி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கலாம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் எதிர்வரும் வாரம் முதல் வரிசையாக ஆணைக்குழுவில் முன்னிலையாகலாம். விடயங்களை முன்வைக்கலாம். அப்போது தான் உண்மை வெளிவருமென அமைச்சர்களான விஜித்த ஹேரத், நளிந்த ஜயதிஸ்ஸ கூட்டாக வலியுறுத்தினார்கள்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் 17-04-2026 அன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்கள்.
வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிடுகையில்,
ஊழலுக்கு எதிரான கொள்கைகளை முன்னிலைப்படுத்தி செயற்பட்டோம்.அதனால் தான் மக்கள் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படுகிறது. விசாரணைகளை வினைத்திறனாக்குவதற்காக ஆணைக்குழுவுக்கு தேவையான மனித மற்றும் பௌதீக வளங்களை வழங்கியுள்ளோம்.
நீதிமன்றங்களும் சுயாதீனமாக செயற்படுகின்றன.
நிலக்கரி இறக்குமதி தொடர்பில் பரவலாக பல விடயங்கள் பேசப்படுகின்றன. நிலக்கரி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எவ்வித மோசடியிலும் ஈடுபடவில்லை. அல்லது மோசடிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செயற்படவில்லை என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறோம்.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரித் தொகையில் தரமற்ற தன்மை காணப்படுவதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதனால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது என்பதையும் பகிரங்கமாக ஏற்றுக்கொள்கிறோம்.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற கோப்குழுவில் நிலக்கரி விவகாரம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி குறித்து கணக்காய்வாளர் திணைக்களம் பரிசீலனை செய்ய வேண்டும்.அதற்கமைய கணக்காய்வாளர் நாயகம் அண்மையில் பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். குறித்த நிலக்கரி கொள்வனவு விடயத்தில் முன்னாள் அமைச்சர் தலையிடவில்லை என்று அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நிலக்கரி கொள்வனவு விடயத்தை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சியினர் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தார்கள். இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரமற்றது என்பதை மாத்திரம் குறிப்பிட்டார்கள். ஆனால் அதற்கும் அமைச்சருக்கும் இடையில் எவ்வாறான தொடர்பு இருந்தது என்பதை குறிப்பிடவில்லை.
2009 ஆம் ஆண்டு முதல் 2026 மார்ச் வரையான காலப்பகுதியில் நுரைச்சோலை அனல் மின்நிலையத்துக்கு 465 கப்பல்கள் ஊடாக நிலக்கரி தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. நிலக்கரி இறக்குமதியின் போது பல்வேறுப்பட்ட வழிகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக முன்னாள் வலுசக்தி அமைச்சர்களான பவித்ராதேவி வன்னியராச்சி, ரஞ்சித் சியம்பலாபிடிய ஆகியோர் பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்கள். ஆனால் அந்த முறைகேடுகள் குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் அந்த அரசாங்கங்கள் மேற்கொள்ளவில்லை.காலபோக்கில் அவை மூடிமறைக்கப்பட்டன.
தரமற்ற நிலக்கரி கொள்வனவு குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளிக்கப்பட்டு உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிலக்கரி நிறுவனம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கண்காணிப்பில் உள்ளது. நிலக்கரி கொள்வனவு குறித்து எதிர்க்கட்சியினர் மக்கள் மத்தியில் பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளார்கள்.
தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்கிறோம்.இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர் தொடர்பில் ஆராய்வதற்கும், இதுவரையான காலப்பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரி குறித்து ஆராய்ந்து உண்மையை வெளிப்படுத்துவதற்கும் உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் பூரண அதிகாரமிக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
06 மாத காலத்தை வரையறுத்து இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பொதுச் சட்டத்தின் பிரகாரம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். சுயாதீன விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டும் என்பதற்காகவே வலுசக்தி அமைச்சர் மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் ஆகியோர் பதவி விலகியுள்ளார்கள் என்றார்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் ஒருவாரம் கூட நிலுவையில் இருப்பதில்லை. நிலக்கரி விவகாரத்தை முன்னிலைப்படு;த்தி எதிர்க்கட்சியினர் அரசியல் பிரசாரம் செய்தார்கள். நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்தார்கள்.
நம்பிக்கையில்லா பிரேரணையில் குறித்த நிலக்கரி இறக்குமதியில் அமைச்சர் எவ்வாறான மோசடியில் ஈடுபட்டார் என்று எதிர்க்கட்சியினர் தெளிவாக குறிப்பிடவில்லை. அவ்வாறு ஈடுபட்டிருந்தால் ஆதாரத்தை முன்வைக்குமாறு குறிப்பிட்டோம். ஆனால் எதிர்க்கட்சியினர் அதை கவனத்திற் கொள்ளவில்லை.
நிலக்கரி கொள்வனவு குறித்து இதுவரை காலமும் எதிர்க்கட்சியினர் குறிப்பிட்ட விடயங்களை ஜனாதிபதி ஆணைக்குழுவில் குறிப்பிடலாம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஊடக சந்திப்புக்களை நடத்தி குறிப்பிட்ட விடயங்களை எதிர்வரும் வாரம் முதல் வரிசையில் நின்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.





