ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் - பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை
ஒரு அதிகாரி குற்றச் செயலில் ஈடுபட்டால் அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதை நாட்டுக்குச் செய்யும் துரோகம் என அர்த்தப்படுத்துவது தவறானது.
இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாக கொலைகள், காணாமல் போதல்கள் மற்றும் அரசியல் படுகொலைகள் முறையான விசாரணையின்றி காலப்போக்கில் மறைக்கப்படும் ஒரு ஆபத்தான போக்கு காணப்படுகிறது. 70களில் தொடங்கிய இந்தத் தேசியப் பேரழிவு கொள்கை இன்றும் தொடர்கிறது. அந்த நிலைமை உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களால் கொல்லப்பட்டவர்களுக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் சாதகமான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. இருப்பினும், சில அதிகாரிகள் விசாரணைகளைத் தடுக்க முயல்வதாகத் தெரிவித்த பேராயர், இவ்விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 21-04-2026 அன்று 7 ஆண்டுகள் நிறைவடைந்தமையை முன்னிட்டு, கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் இடம்பெற்ற விசேட பிரார்த்தனை மற்றும் நினைவேந்தல் நிகழ்விலேயே பேராயர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 2019 ஏப்ரல் 21 அன்று நடத்தப்பட்ட அழிவுகரமான தாக்குதல்களினால் 278 பேர் உயிரிழந்தனர் என்பதையும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பதையும் நாம் அறிவோம். இது இலங்கையின் பொருளாதாரத்தில் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, 30 ஆண்டுகால யுத்தத்திற்குப் பின் பல்வேறு மதங்களுக்கும் இனங்களுக்கும் இடையில் மெல்ல மெல்ல கட்டியெழுப்பப்பட்ட நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையையும் கடுமையாகப் பாதித்தது.
நாம் தற்போது கூடியிருக்கும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம், மற்றும் கொழும்பிலுள்ள சினமன் கிராண்ட், ஷங்ரி-லா, கிங்ஸ்பரி மற்றும் டிராபிகல் இன் ஆகிய ஹோட்டல்களில் நடத்தப்பட்ட ஏழு குண்டு வெடிப்புகள், தேவாலயங்களில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்களையும், ஹோட்டல்களில் இருந்த சுற்றுலாப் பயணிகளையும் ஊழியர்களையும் பலிகொண்டன. உயிரிழந்தவர்களில் 68 சிறுவர்களும், 14 நாடுகளைச் சேர்ந்த 45 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என்பதை நாம் நினைவுகூர வேண்டும்.
இந்தக் குண்டுத் தாக்குதல்கள் மூலம் நாட்டில் மீண்டும் இன மற்றும் மத ரீதியான மோதல்களை உருவாக்க ஒரு சூட்சுமமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. தாக்குதலுக்குப் பின்னர் மதத் தலைவர்கள் விடுத்த அமைதி வேண்டுகோள்களினால் இனக்கலவரங்களை உருவாக்கும் முயற்சிகள் தோல்வியடைந்ததைக் கண்ட சதிகாரர்கள், ஏப்ரல் 21 தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு மே 5ஆம் திகதி நீர்கொழும்பிலும், பின்னர் மே 11, 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நாத்தாண்டியா - மாதம்பை தொடங்கி கொட்டாரமுல்ல ஊடாக மினுவாங்கொடை வரை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகத் திட்டமிட்ட வன்முறைகளைத் தூண்டிவிட்டனர். முஸ்லிம் வீடுகள் மீது கற்கள் எறியப்பட்டன, நிறுவனங்கள் எரிக்கப்பட்டன. இதில் ஒரு முஸ்லிம் சகோதரர் கொல்லப்பட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில், இந்தத் தூண்டுதல் சம்பவங்கள் குறித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது. வன்முறைகளைக் கட்டுப்படுத்த சில பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தவறிவிட்டனர் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தக் கலவரங்களை ஏற்பாடு செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். இது ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையதாக இருக்கலாம். பாதுகாப்புத் துறையில் உள்ள எவராவது இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதைத் தடுத்தார்களா என்பதையும் கண்டறிய வேண்டும்.
இந்த நினைவேந்தலை ஒருங்கிணைக்கும் நாம், அதிகாரத்தில் உள்ளவர்களிடம் கேட்பது என்னவென்றால், இந்தத் தாக்குதல்கள் குறித்து ஆழமாகவும் தீவிரமாகவும் விசாரணை நடத்தி, இதன் பின்னணியில் உண்மையில் யார் இருந்தார்கள் என்பதை வெளிப்படுத்துங்கள். இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாக கொலைகள், காணாமல் போதல்கள் மற்றும் அரசியல் படுகொலைகள் முறையான விசாரணையின்றி காலப்போக்கில் மறைக்கப்படும் ஒரு ஆபத்தான போக்கு காணப்படுகிறது. 70களில் தொடங்கிய இந்தத் தேசியப் பேரழிவு கொள்கை இன்றும் எங்களைத் தொடர்கிறது.
அரசியல் தலையீடுகள் காரணமாக சட்டத்தின் ஆட்சி பலவீனமடைந்துள்ளது. ஊழல் கலாச்சாரத்திற்குள் உண்மையை மறைப்பதும், பொய்களைப் பரப்புவதும் ஒரு வாடிக்கையாகிவிட்டது. சமூக ஒழுக்கம் சீர்குலைந்து, மனித உயிர் மற்றும் கண்ணியத்திற்கான மதிப்பு குறைந்து வருகிறது. அரசியல் தலைவர்கள் பாதுகாப்புப் பிரிவினரைத் தமது சட்டவிரோதச் செயல்களுக்காகப் பயன்படுத்தும் கலாச்சாரம் மிகவும் கவலைக்குரியது.
இத்தகைய சூழ்நிலையில், எமது அண்மைக்கால வரலாற்றில் நடந்த வன்முறைகள் மற்றும் பயங்கரவாதச் செயல்களுக்குப் பின்னாலுள்ள உண்மையை தேடுவது மிகவும் கடினமாகியுள்ளது. அரசியல் தலையீடு மற்றும் பொய்கள் காரணமாக உண்மை வெளிவருவது தடுக்கப்படுகிறது. விசாரணைகளைத் தடுப்பவர்கள் அல்லது திசைதிருப்புபவர்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள்? உண்மை வெளிவந்தால் அது தங்களைப் பாதிக்கும் என்ற அச்சத்தினால் தான் அவர்கள் இவ்வாறு செயல்படுகிறார்களா?
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட சில முக்கிய விடயங்கள் இன்னும் முழுமையாக விசாரிக்கப்படவில்லை. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் கடந்த பல ஆண்டுகளாகத் தீராத துயரிலும் வலியிலும் உள்ளனர். உண்மை எப்போது வெளிவரும் என்று அவர்கள் எங்களிடம் கேட்கிறார்கள். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முதலாம் தொகுதி மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது, ஏனைய தொகுதிகள் இன்னும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இந்த இரகசியத்தன்மை எமக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது.
உயிரிழந்தவர்கள் கத்தோலிக்கர்களாக இருப்பதாலும், எமது புனிதமான தினத்தில் எமது தேவாலயங்களில் இந்தத் தாக்குதல் நடந்ததாலும், உண்மையை அறிவது எமது அடிப்படை உரிமையாகும். 2019 முதல் பதவியிலிருந்த ஆட்சியாளர்கள், பொலிஸ் தலைவர்கள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் உண்மையை வெளிக்கொணருவதற்குப் பதிலாக, பொதுமக்களைக் குழப்பவும் உண்மையை மறைக்கவுமே முயன்றனர்.
2024இல் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் சாதகமான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. இருப்பினும், சில அதிகாரிகள் விசாரணைகளைத் தடுக்க முயல்கின்றனர். செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட தகவல்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். பதவிகளில் இருப்பவர்கள் அல்லது முன்னொரு காலத்தில் நாட்டுக்குச் சேவை செய்தவர்கள் என்ற காரணத்துக்காக எவரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஒரு அதிகாரி குற்றச் செயலில் ஈடுபட்டால் அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதை நாட்டுக்குச் செய்யும் துரோகம் என அர்த்தப்படுத்துவது தவறானது.
கடந்த 2024 ஒக்டோபர் 6ஆம் திகதி கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, 'காலப்போக்கில் உண்மை புதைந்து போக விடமாட்டேன்' என்று உறுதியளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றி, இந்த மனிதாபிமானமற்ற படுகொலையின் பின்னாலுள்ள உண்மையை வெளிப்படுத்த முழுமையான, வெளிப்படையான விசாரணையை முன்னெடுக்குமாறு அவரை நாம் கேட்டுக்கொள்கிறோம். நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்றார்.





