நீதிபதிகளின் பதவிக்காலம் குறித்து பரிந்துரைகள் ஆராயப்படுகின்றன - அமைச்சர் ஹர்ஷன
நீதித்துறையின் சேவையாளர்களின் பதவி காலத்தை நீட்டிப்பது குறித்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது. பலர் சாதக மற்றும் பாதக காரணிகள் அனுப்பிவைத்து வைத்துள்ளார்கள்.
பிரதம நீதியரசர் உட்பட நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கு அரசாங்கம் உத்தியோகபூர்வமான தீர்மானத்தை எடுக்கவில்லை. பதவி காலம் குறித்து பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் ஆராயப்படுகின்றன. எதிர்க்கட்சியினரே தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளார்கள் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பில் தற்போதைய பிரதான பேசுபொருளாக உள்ள பிரதம நீதியரசர் மற்றும் நீதியரசர்களின் பதவி காலம் நீட்டிப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல், சட்டவாட்சி கோட்பாட்டுக்கு அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சியினர் முன்வைக்கிறார்கள். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கான எவ்வித அடிப்படை காரணிகளும் முன்வைக்கப்படவில்லை. நீதிமன்றத்தின் சுயாதீனம் பற்றி அரசாங்கத்துக்கு பாடம் கற்பிப்பவர்களில் ஒருசிலர் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். ஒருசிலர் பிணையில் உள்ளார்கள். முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவின் வீட்டுக்கு கல்லெறிந்தவர்களும் இன்று நீதித்துறை சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்.
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவி உயர்வு தொடர்பான நடவடிக்கைகளை நீதிச்சேவை ஆணைக்குழுவே முன்னெடுக்கிறது. உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் பதவியில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களை போன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தனிப்பட்ட விருப்பத்துக்கமைய நீதியரசர்களை நியமிக்க முடியாது. அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் மாத்திரமே ஜனாதிபதியால் குறித்த நியமனங்களை வழங்க முடியும்.
எதிர்க்கட்சியினர் இன்று நீதித்துறை சுதந்திரம் பற்றி பேசுவது வேடிக்கையாகவுள்ளது. நீதித்துறை சுயாதீனமாகவே செயற்படுகிறது. வழக்கு விசாரணைகள் மற்றும் விசாரணைகளுக்குரிய வசதிகள் போதுமான அளவில் வழங்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் கிடப்பில் போடப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நீதிமன்றம் உரிய தீர்ப்பினை வழங்குகிறது.இதில் என்ன பிரச்சினை உள்ளது.வழக்கு விசாரணைகள் துரிதமாகியுள்ளதால் ஊழல்வாதிகளும், குற்றவாளிகளும், படுகொலையாளிகளும் இன்று அச்சமடைந்துள்ளார்கள். ஒன்றிணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள்.
நீதித்துறையின் சேவையாளர்களின் பதவி காலத்தை நீட்டிப்பது குறித்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது. பலர் சாதக மற்றும் பாதக காரணிகள் அனுப்பிவைத்து வைத்துள்ளார்கள். அவை தற்போது ஆராயப்படுகிறது. இதில் என்ன பிரச்சினை காணப்படுகிறது.வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நீதித்துறைக்கு அச்சுறுத்தல் என்ற போலியான குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் முன்வைக்கிறார்கள்.
திருடர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது.நீதித்துறை சுதந்திரமாகவே செயற்படுகிறது.சட்டவாட்சி கோட்பாடு பாதுகாக்கப்பட்டுள்ளது. ஊழல்வாதிகளின் பயம் மற்றும் திணறல் நியாயமானவே அது எவ்வழியிலும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.நீதித்துறைக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் தெளிவாகவுள்ளார்கள். எதிர்கட்சியினர் மாத்திரம் தான் கலக்கமடைந்து போராடுகிறார்கள்.





