ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அமலாக்க நடவடிக்கை முன்னெடுப்பு - ரங்க திசாநாயக்க
தென் கொரியாவின் ஊழல் ஒழிப்பு மற்றும் சிவில் உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து நடைமுறை ரீதியான ஒத்துழைப்புகளை இலங்கை மேற்கொண்டு வருகின்றன.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை தற்போது கொள்கை சீர்திருத்த மட்டத்திலிருந்து மாறி, முழு அளவிலான அமலாக்க நடவடிக்கைகளை நோக்கி நகர்ந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவில் நடைபெற்ற சர்வதேச ஊழல் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் விரிவான நிறுவன சட்ட மற்றும் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், 2025ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து, தெளிவான மக்கள் ஆணையின் கீழ் இந்த ஊழல் ஒழிப்பு சீர்திருத்தங்களை நடைமுறைச் சாத்தியமான முடிவுகளாக மாற்றுவதில் நாடு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
விசாரணைகளை வலுப்படுத்துவதற்கும், வழக்கு முகாமைத்துவ அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் அதிகாரிகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் மூலம் விரைவான மற்றும் பயனுள்ள முடிவுகளை உறுதி செய்ய முடியுமாக உள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஊழல் தொடர்பான வழக்குகளை தாமதமின்றி விசாரிப்பதற்காக இலங்கையில் மூன்று பிரத்தியேக மேல் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அதேவேளையில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஊழியர்களின் திறனை அதிகரித்தல், பணிப்பாய்வுகளை நெறிப்படுத்துதல் மற்றும் பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையில் சேவைகளை பரவலாக்குதல் உள்ளிட்ட மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், வெளிப்படைத்தன்மையை நோக்கிய முக்கிய படியாக, செயற்திறன், பொறுப்புக்கூறல் மற்றும் மேற்பார்வையை மேம்படுத்துவதற்காக இந்தாண்டு மின்னணு சொத்து விபரப்பிரகடன முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2025–2029 தேசிய ஊழல் ஒழிப்பு செயற்றிட்டம் மற்றும் ஆணைக்குழுவின் மூலோபாய செயற்றிட்டம் ஆகியன ஊழல் தடுப்பு, சட்ட அமலாக்கம், பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான வழிகாட்டலை வழங்குகின்றன.
தென் கொரியாவின் ஊழல் ஒழிப்பு மற்றும் சிவில் உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து நடைமுறை ரீதியான ஒத்துழைப்புகளை இலங்கை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, தென் கொரியாவின் ஊழல் மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் உதவியுடன் ஊழல் ஒழிப்பு முன்முயற்சி மதிப்பீடு உருவாக்கப்பட்டுள்ளது.
கொரியாவின் நேர்மை மதிப்பீட்டு முறையை அடிப்படையாகக் கொண்ட இந்த அமைப்பு, இலங்கையின் சட்ட மற்றும் நிர்வாகக் கட்டமைப்பிற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஊழல் என்பது உலகளாவிய சவாலாக நீடித்த போதிலும், தொடர்ச்சியான, நடைமுறைச் சாத்தியமான மற்றும் அமலாக்கத்தை மையமாகக்கொண்ட கூட்ச் செயற்பாட்டின் மூலம் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைய முடியும் என்றார்.





