பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்
தற்போதைய சூழலில் தமது நாளாந்த செலவுகள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு அந்தத் தொகை போதுமானதாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தின் அரசியலமைப்பு ரீதியான சட்டபூர்வத்தன்மையை சவால் செய்து உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர்களான எம்.எம். பிரேமசிரி, நவரத்ன பண்டா, பி.எம். தீபால் குணசேகர மற்றும் சமன்சிறி ஹேரத் ஆகியோரால் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் 2004 முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாகக் கடமையாற்றியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மற்றைய மனுவை 1988 முதல் 2004 வரை பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றிய பியசோம உபாலி மற்றும் உபாலி அமரசிறி ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் ஆலோசனையின் பேரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களில், கடந்த 7 ஆம் திகதி நீதி அமைச்சரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 1977 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க தேசிய அரசப் பேரவைச் சட்டத்தின் 108(2) பிரிவின்படி, ஐந்து வருட காலத்தைப் பூர்த்தி செய்யும் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் வாதிடுகின்றனர். அத்தோடு 1979, 1982 மற்றும் 1985 ஆம் ஆண்டு சட்டங்களின் மூலமும் ஓய்வூதியம் மற்றும் அவர்கள் இறந்ததன் பின்னர் மனைவிகளுக்கான கொடுப்பனவுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையையும் சுட்டிக்காட்டியுள்ளனர். சுமார் 35 வருடங்களாகத் தமது வாழ்க்கையை மக்கள் சேவைக்காக அர்ப்பணித்துள்ளதாகத் தெரிவிக்கும் மனுதாரர்கள், தற்போது தமக்கு ஓய்வூதியமாக 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபா வரையே கிடைப்பதாகவும், தற்போதைய சூழலில் தமது நாளாந்த செலவுகள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு அந்தத் தொகை போதுமானதாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் ஊடாக மக்கள் சேவையில் ஈடுபடுவது பெரும் ஆபத்து நிறைந்தது எனக் கூறும் மனுதாரர்கள், அந்தச் சேவையின் காரணமாகவே எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, ரணசிங்க பிரேமதாச, லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க, சி.வி. குணரத்ன மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் போன்ற தலைவர்கள் தமது உயிரைத் தியாகம் செய்ய நேரிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஓய்வூதியத்தை இரத்து செய்வது குறித்து ஆராய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டி. சித்திரசிறி தலைமையிலான குழுவும், ஏற்கனவே ஓய்வூதியம் பெறுபவர்களின் உரிமையை பின்னோக்கிப் பாதிக்கும் வகையில் இரத்து செய்ய முடியாது என ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தமக்குத் தெரியவந்துள்ளதாகவும் மனுதாரர்கள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறான பின்னணியிலும், அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் நோக்குடன் அரசாங்கம் இந்தச் சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அவர்கள், இது அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மை மற்றும் மக்களின் அபிப்பிராய வாக்கெடுப்பு மூலம் அது அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.





