சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் அரசாங்கத்தில் இருந்துள்ளார்கள்: அமைச்சர் பிமல்
லசந்த விக்கிரமசிங்கவின் விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் அது பற்றி ஏதும் குறிப்பிட முடியாது என்று பதிலளித்துள்ளார்கள்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் அரசாங்கத்தில் இருந்துள்ளார்கள். அதேபோல் அப்போது எதிர்க்கட்சியில் இருந்தவர்களும் அதிகாரத்தில் இருந்துள்ளார்கள். லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம் என்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 08-01-2026 அன்று நடைபெற்ற அமர்வின் போது ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, `சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன.இந்த விடயம் தொடர்பில் பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கு சபாநாயகர் அலுவலகத்துக்கு விண்ணப்பித்திருந்தேன். லசந்த விக்கிரமசிங்கவின் விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் அது பற்றி ஏதும் குறிப்பிட முடியாது என்று பதிலளித்துள்ளார்கள்.
இந்த பாராளுமன்றத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள பிணைமுறி மோசடி, உயிர்த்த உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல்கள், மருந்து கொள்வனவு முறைகேடு தொடர்பில் கேள்விகள் கேட்கப்படுகிறது. அதற்கும் பதில் கிடைக்கப்பெறுகிறது. ஆனால் லசந்தவின் விவாரத்தில் பதில் இல்லை. ஏன் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்கின்றீர்கள். இது கவலைக்குரியது என்றார்.
இதற்கு எழுந்து பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க, சிரச ஊடக நிறுவனம் மீதான தாக்குதல் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளரும் ஓரிரு நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற் கொண்டுள்ளோம்.
லசந்த விக்கிரமதுங்க 2008 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையுடன் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டவர்களும், அப்போது எதிர்க்கட்சியில் இருந்தவர்களும் ஆட்சியில் இருந்துள்ளார்கள். படுகொலையாளிகள் அரசாங்கத்தில் இருந்துள்ளார்கள். இந்த படுகொலை தொடர்பில் உண்மையை நாங்கள் நிலைநாட்டுவோம் என்றார்.





