ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் பாரிய போராட்டம்
அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் இடம்பெயர்ந்து, அடிப்படை வசதிகளின்றி தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் காணி மற்றும் வீட்டுரிமையைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் 28-01-2026 அன்று எதிர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு கோட்டை மற்றும் ஜனாதிபதி செயலகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பெருமளவிலான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலை நோக்கி செல்ல முயன்றபோது, பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தித்வா அனர்த்தால் பாதிக்கப்பட்டு தமது வீடுகளையும் உறவுகளையும் இழந்து மலையகத்தில் வாழும் பெருளவான மக்கள் நிர்கதியாகியுள்ளனர். அணர்த்த்தின் பின்னர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் முறையான அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவரும் நிலையில் தமக்கான நிரந்த தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்தியே நேற்று (28) காலை 11 மணியளவில் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
"சமூக நீதிக்கான மக்கள் இயக்கம்" மற்றும் "சம உரிமை இயக்கம்" ஆகியன இணைந்து முன்னெடுத்த இந்தப் போராட்டத்தில், மாத்தளை கம்படுவ, நுவரெலியா கந்தப்பொல, எஸ்கடேல் தோட்டம் மற்றும் கொங்கோடியா தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பல பேருந்துகளில் கொழும்புக்கு வருகைத்தந்திருந்ததுடன், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தமது உரமைக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
"வாழ வழியில்லை, தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டத்தை அழுல்படுத்து, எமது பிள்ளைகளுக்கு பாடசாலை இல்லை", "வாக்குறுதி அளிக்கப்பட்ட 25,000 ரூபா வாடகைப்பணம் எங்கே?", "200 வருட உழைப்பிற்கு மிஞ்சியது லயன் அறைகளா?" போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பாதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்பாட்டக்காரர்கள் போராடினர். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தமது கல்வி உரிமையைக் கோரி எழுதிய உருக்கமான கோரிக்கை மனுக்களை ஜனாதிபதியிடம் கையளிக்கச் சென்ற சந்தர்ப்பத்தில், பொலிஸார் மனிதாபிமானமற்ற முறையில் அவர்களைத் தடுத்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது குற்றம் சுமத்தினர்.
மாத்தளை கம்படுவ பகுதியில் மாத்திரம் 540 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி, முழு கிராமமே அழிந்துள்ள நிலையில், அங்கிருந்த இரண்டு பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் 350 மாணவர்கள் கல்வி பயில இடமின்றி 12 கிலோமீற்றர் தூரம் நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.
இந்த மக்கள் போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் உறுபினர் வசந்த முதலிகே தெரிவிக்கையில், அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாடகை வீடுகளுக்குச் சென்றால் 25 ஆயிரம் ரூபா வழங்குவதாக தெரிவித்தனர். எனினும் ஒரு ரூபா கூட இன்னும் வழங்கப்படவில்லை. ஜனாதிபதி நாட்டின் பல பகுதிகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நடுகின்றார். மண்சரிவினால் வீடிழந்த மாத்தளை கம்படுவ கிராமத்திற்கு எந்த அதிகாரியாவது சென்று பார்த்தார்களா?
200 வருடங்களாக இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்கிய மலையக மக்கள், இன்று மழை பெய்தால் இறந்து விடுவோமோ என்ற பயத்தில் மரண பிடியில் வாழ்கின்றனர். 50 மில்லிமீற்றர் மழை பெய்தால் ஊரை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் கூறுகிறார்கள். எங்கே செல்வது? தங்குவதற்கு ஒரு பொது மண்டபத்தைக் கூட இந்த அரசாங்கம் ஒதுக்கவில்லை. லயன் அறைகளில் வாழும் காலம் முடிந்துவிட்டது. அவர்களுக்குக் காணி உரிமையுடன் கூடிய பாதுகாப்பான வீடுகள் வழங்கப்பட வேண்டும்.
வெறும் பிரசாரங்களை முன்னெடுத்து மக்களை ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு, மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லையெனில், இந்தப் போராட்டம் நாடளாவிய ரீதியில் மேலும் தீவிரமடையும் என்றார். அத்தோடு ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ஒருவருடன் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, தற்காலிகமாகப் போராட்டம் கைவிடப்பட்ட போதிலும், உரிய காலக்கெடுவிற்குள் தீர்வு கிடைக்காவிடின் மீண்டும் கொழும்புக்கு வந்து பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் இதன்போது தெரிவித்தனர்.





