புத்தாண்டு சவால்கள் மிக்கதாக அமையக்கூடும்: பிரதமர் கலாநிதி ஹரிணி
புத்தாண்டு நிமித்தம் அனைத்துப் பணியாளர்களினாலும் அரச சேவைச் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பிரதமர் தனது புத்தாண்டு நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
புத்தாண்டானது கடந்த ஆண்டை விடவும் சவால்கள் மிக்கதாக அமையக்கூடும். அனைவரும் ஒரு குழுவாக அந்தச் சவால்கள் அனைத்தையும் உறுதியுடன் எதிர்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். கடந்த ஆண்டில் ஏற்பட்ட 'தித்வா' சூறாவளியினால் நாம் பல பாடங்களைக் கற்றுக்கொண்டோமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2026 புத்தாண்டில் பிரதமர் அலுவலகத்தின் கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி ஆகியோரின் தலைமையில் 01-01-2026 அன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, புத்தாண்டு நிமித்தம் அனைத்துப் பணியாளர்களினாலும் அரச சேவைச் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பிரதமர் தனது புத்தாண்டு நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த ஆண்டில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இந்தப் புத்தாண்டானது அதனை விடவும் சவால்கள் மிக்கதாக அமையக்கூடும். ஆயினும், அனைவரும் ஒரு குழுவாக அந்தச் சவால்கள் அனைத்தையும் உறுதியுடன் எதிர்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். கடந்த ஆண்டில் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளியினால் நாம் பல பாடங்களைக் கற்றுக்கொண்டோம்.
குறிப்பாக, எவ்விதப் பாகுபாடுமின்றி இவ்வாறான அவசர நிலைமைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிய அனுபவத்தைப் பெற்றோம். இனிவரும் காலங்களில் மேலும் சூழல்நேயமிக்கவர்களாக மாறி,இவ்வாறான அனர்த்தங்களைக் குறைக்கும் வகையில் சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்குண்டு. அதற்கமைய,காலநிலை மாற்றங்கள் குறித்த புரிதலுடன், அபிவிருத்தியடைந்து வரும் நாடாக எமது அனைத்துத் திட்டங்களையும் வகுக்க வேண்டும் என்றார்.





