உள்நாட்டில் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபடும் பாதாள உலக குழுவினர் - பிரதி பொலிஸ்மா அதிபர் சந்தன
குறிப்பாக கடந்த வருடங்களில் பதிவாகிய 2022 (82), 2023 (82), 2024 (33), 2025 (11) திட்டமிட்ட மனித படுகொலைகளின் எண்ணிக்கை குறைவடைந்து செல்வதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக பொலிஸார் பாதாள உலகக்குழுவினர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவினரிடமிருந்து துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்து வருவதால், மனித படுகொலை உள்ளிட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றக்குழுவினருக்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுத தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், உள்நாட்டில் அவற்றை தயாரித்து வருவதாக மாவட்ட குற்றப்பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சந்தன கொடிதுவாக்கு தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் 11-06-2026 அன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச் சூடு, மனித படுகொலைகள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் என்பன கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக கடந்த வருடங்களில் பதிவாகிய 2022 (82), 2023 (82), 2024 (33), 2025 (11) திட்டமிட்ட மனித படுகொலைகளின் எண்ணிக்கை குறைவடைந்து செல்வதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல்களிடம் இருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையே இதற்குப் பிரதான காரணமாகும். குற்றக் கும்பல்களிடம் உள்ள துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய பொலிஸாரால் விசேட சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் குற்றச்செயல்களுக்காகத் தானியங்கி துப்பாக்கிகளான ரி-56, எகே-47, 9 எம்.எம்ரக கைதுப்பாக்கி மற்றும் ரிவோல்வர் ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் இவ்வாறான குழுக்களிடமிருந்த பெருமளவான துப்பாக்கிகள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன. அதற்கமைய 2020 ஆம் ஆண்டு 1459 துப்பாக்கிகளும், 2021 ஆம் ஆண்டு 2225 துப்பாக்கிகள், 2022 ஆம் ஆண்டு 1684 துப்பாக்கிகள், 2023 ஆம் ஆண்டு 3022 துப்பாக்கிகளும், 2024 ஆம் ஆண்டு 2414 துப்பாக்கிகளும் இவ்வாறு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு இராசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், குறித்த துப்பாக்கி கொழும்பில் இடம்பெற்ற சம்பவத்துக்கு இரு நாட்களுக்கு முன்னதாக மாத்தறையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டது எனத் தெரியவந்துள்ளது.
பாதாள குழுக்களிடம் ஆயுதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் இவ்வாறு ஒரே ஆயுதத்தைப் பயன்படுத்தியுள்ளனர். அதேபோல் ஆயுதத் தேவையை நிவர்த்தி செய்ய உள்நாட்டில் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளமையும் விசாரணை அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு மாதம்பிட்டிய பொது மயானத்திலிருந்து மத்திய குற்றப்பிரிவினரால் மீட்கப்பட்ட தானியங்கி துப்பாக்கி ஓர் உள்நாட்டுத் தயாரிப்பாகும். இஸ்ரேல் தயாரிப்பான மினி உசி துப்பாக்கியை ஒத்த வடிவில் இந்த துப்பாக்கி உருவாக்கப்பட்டிருந்தது.
அதுபோல் தெமட்டகொட பகுதியிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கட்டுத் துப்பாக்கிகளை ஒத்த 19 ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருந்தன. மேலும் வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள பாதாள உலகக்குழுத் தலைவர்களின் வழிகாட்டலுக்கமைய செயற்படும் 46 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் நாட்டில் உள்ளன. அவற்றில் தற்போது 24 குழுவினர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலகக்குழுத் தலைவர்கள், உறுப்பினர்களும் வெளியுலகத் தொடர்புகள் இன்றி வெவ்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதனால் குழுக்களுக்கிடையிலான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் குற்றச்செயல்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள முடிந்துள்ளது. மேலும், இவ்வருடத்தில் 6 மாத காலப்பகுதியில் 20 மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது என்றார்.





