முன்னாள் எம்.பி. சந்தன கத்திரியாராச்சியின் வீட்டிலிருந்து ஆயுதங்கள், தோட்டாக்கள் மீட்பு
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாராச்சியை பொலிஸார் தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தியதுடன், அவரது வீட்டை மேலதிகமாகச் சோதனையிட்டுள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாராச்சியின் கஸ்பேவ பகுதியில் அமைந்துள்ள வீட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னெடுத்த விசேட தேடுதலின் போது நான்கு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட சோதனை உத்தரவுக்கு அமைய இந்த தேடுதல் நடவடிக்கையும் சோதனையும் முன்னெடுக்கப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
முதலில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாராச்சியின் வீட்டை சோதனை செய்தபோது ரி-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 221 தோட்டாக்களும், ரி-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்ற இரண்டு மெகசின்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதே தேடுதலின் போது 7.2 இரண்டு ரக துப்பாக்கி தோட்டாக்கள் 31 , 0. 2 ரக தோட்டாக்கள் 103 ஒரு வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டு ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட கைக்குண்டானது யூகோஸ்லோவியாவில் தயாரிக்கப்பட்டதென பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாராச்சியை பொலிஸார் தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தியதுடன், அவரது வீட்டை மேலதிகமாகச் சோதனையிட்டுள்ளனர். இதன்போது பதிவு செய்யப்பட்ட துப்பாக்கிகள் நான்கினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதில் ஒரு துப்பாக்கி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாராச்சியின் பெயரிலும், ஏனைய மூன்றும் அவரது மனைவியின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளில் ஷொட்கன் ரக துப்பாக்கிகள் இரண்டும், 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கிகள் இரண்டும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த ஆயுதங்கள் தொடர்பாகவும் கைப்பற்றப்பட்ட கைக்குண்டு உள்ளிட்ட தோட்டாக்கள் தொடர்பாகவும் விரிவான விசாரணை ஒன்றினைக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர். கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் நேரடிக் கட்டுப்பாட்டில், இது தொடர்பிலான விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் இந்திக லொக்குஹெட்டியின் கீழான சிறப்பு குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.





