வலுச்சக்தி அமைச்சரின் மோசடியின் பங்கு ஜனாதிபதிக்கும் செல்கிறதா? - ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி.
நண்பர்களுக்கு சலுகை வழங்குவதில்லை என்றே தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்தார்கள். ஆனால் தேர்தலுக்கு செலவழித்த அனைவருக்கும் ஜனாதிபதி நல்லமுறையிவ் கவனித்து வருகிறார்.
வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் மோசடி தொடர்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஜனாதிபதி நாட்டின் முக்கிய அமைச்சுப்பதவியை வழங்கியுள்ளதன் மூலம் அந்த மோசடிகளில் ஒரு பங்கு ஜனாதிபதிக்கும் செல்கிறதா என்ற சந்தேகம் எழுகிறதென ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 10-04-2026 அன்று இடம்பெற்ற மின்வலு சக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நிலக்கரி மோசடி குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் அமைச்சர் குமார ஜயகொடி, அநுரகுமார திசாநாயக்க விவசாய அமைச்சராக இருந்த சமயத்தில், உர கூட்டுத்தாபனத்தின் தலைவராக குமார ஜயகொடியை நியமித்திருந்தார். அங்கு அவர் மேற்கொண்ட மோசடி தொடர்பில் தற்போதும் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மோசடி குற்றச்சாட்டுள்ள ஒருவருக்கு நாட்டில் இருக்கும் முக்கியமான அமைச்சுப்பதவியை ஜனாதிபதி வழங்கி இருக்கிறார். உர கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருக்கும்போது இவருக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டு இருப்பது ஜனாதிபதிக்கு நன்கு தெரியும். அது தெரிந்தும் ஜனாதிபதி குமார ஜயகொடிக்கு முக்கியமான அமைச்சுப்பதவியை வழங்கியுள்ளதன் மூலம், இந்த மோசடியில் சில பங்கு ஜனாதிபதிக்கும் செல்கிறதா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது.
மேலும் நிலக்கரி கொள்வனவில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதனால் ஏற்பட்டிருக்கும் நட்டம் மக்கள் மீதே சுமத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றபோதும் ஜனாதிபதி அது தொடர்பில் மெளனமாகவே இருக்கிறார்.
வலுசக்தி அமைச்சர் அவசரமாக ரஷ்யாவுக்கு சென்றதும் இந்த நிலக்கரி தொடர்பில் ரகசிய கலந்துரையாடலை மேற்கொள்வதற்காகும். ஜனாதிபதி அவரை பாதுகாக்க எவ்வளவோ முயற்சித்தாலும் அமைச்சரின் திருட்டுத்தனம் அனைத்து பக்கத்தாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
நண்பர்களுக்கு சலுகை வழங்குவதில்லை என்றே தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்தார்கள். ஆனால் தேர்தலுக்கு செலவழித்த அனைவருக்கும் ஜனாதிபதி நல்லமுறையிவ் கவனித்து வருகிறார். தமிக்க பெரேராவை நல்லமுறையில் கவனித்திருக்கிறார்கள்.
323 கொள்கலன் விடுவிப்பில் மேல்மாகாண ஆளுநருக்கு சொந்தமான கொள்கலன்களும் இருப்பதாக தெரியவந்துள்ளது. மோசடி காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள். இவர்கள் இதுவரை எத்தனை பேருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார்கள் என்கேட்கிறோம். மத்திய வங்கி மோசடி தொடர்பில் தொடர்ந்து கதைத்து வருகிறார்கள். ஏன் அந்த மோசடி காரர்களுக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்கிறோம் என்றார்.





