சுரேஷ் சலேயை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு அனுமதி கோரி சி.ஐ.டி பணிப்பாளருக்கு அவரது மனைவி கடிதம்
சட்டத்தரணிகளின் வருகையானது மீண்டும் நம்பிக்கையூட்டவும், அவருக்கான சட்ட வழிமுறைகளை அவர் புரிந்துகொண்டு, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட செய்வதற்கும் உதவியாக இருக்கும்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள துவான் சுரேஷ் சலே உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தனது நம்பிக்கையை மீண்டும் பெறவும், சட்ட நடவடிக்கைகளைப் புரிந்துகொள்வதுடன், உண்ணாவிரதத்தைக் கைவிடுவதற்கும் அவரது ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்திர பெர்னாண்டோ மற்றும் சட்டத்தரணி அசித் சிறிவர்தன ஆகியோரைச் சந்திப்பதற்கு அனுமதியளிக்குமாறு வலியுறுத்தி, சலேயின் மனைவி மனோரி சலே குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரை வைத்தியசாலையில் தூரத்திலிருந்து பார்ப்பதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, அவரது மனைவி மனோரி சலே சி.ஐ.டி பணிப்பாளருக்கு இந்த அவசரக் கடிதத்தை 08-06-2026அன்று அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் , கடந்த ஜூன் 6 ஆம் திகதி மகனும், சலேயின் சகோதரரும் கணவரைப் பார்வையிட்ட போது, கடுமையான மன உளைச்சலில் காணப்பட்டதை அவதானித்துள்ளனர். அவர் உணவு, தண்ணீர், மருந்துகள் மற்றும் மருத்துவச் சிகிச்சைகள் அனைத்தையும் நிராகரித்து வருவதுடன், தனது மரணம் நெருங்கிவிட்டதாகக் கூறி நம்பிக்கையிழந்த நிலையில் பேசியுள்ளார். ஒரு மனைவியாக இதைக் கேட்பது எனக்கு பேரதிர்ச்சியைத் தந்துள்ளதுடன், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என அச்சமடைந்துள்ளோம்.
அவர் தற்போது தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தாலும், அவரது தற்போதைய மனநிலை மற்றும் தொடர்ச்சியான சிகிச்சைப் புறக்கணிப்பு குறித்து கவலையடைந்துள்ளோம்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், எனது கணவர் சார்பில் முன்னிலையாகும் ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்திர பெர்னாண்டோ மற்றும் சட்டத்தரணி அசித் சிறிவர்தன ஆகிய இருவருக்கும் அவரை சந்திப்பதற்கான அனுமதியை அவசரமாக வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்.
சட்டத்தரணிகளின் வருகையானது மீண்டும் நம்பிக்கையூட்டவும், அவருக்கான சட்ட வழிமுறைகளை அவர் புரிந்துகொண்டு, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட செய்வதற்கும் உதவியாக இருக்கும். இந்த இக்கட்டான தருணத்தில் மருத்துவச் சிகிச்சையைத் தாண்டி, சட்டத்தரணிகளின் வழிகாட்டலும் ஆலோசனையும் அவசியமாகும். இந்த கோரிக்கை முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் மாத்திரமே விடுக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவர்களின் அனுமதி மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டே இந்தச் சந்திப்பு அமையும். அவரது உயிரைப் பாதுகாப்பதே இதன் ஒரே நோக்கமாகும். ஆகையால் காலம் தாமதிக்காது சட்டத்தரணிகள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு வலியுறுத்தியுள்ளார்.





