இலங்கை கடற்பரப்பில் ஆய்வுப்பணியில் ஈடுபடவுள்ள ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பின் கப்பல்
32 நாட்கள் நடைபெறும் இந்த ஆய்வில் கடல்சார் வளங்கள் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புக்களை மதிப்பிடுவதில் விசேட கவனம் செலுத்தப்படும்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களில் ஒன்றான உணவு மற்றும் விவசாய அமைப்பின் கலாநிதி ஃப்ரிட்ஜோஃப் நென்சன் ஆய்வுக் கப்பல்கலன் 11-03-2026 அன்று நாட்டை வந்தடைந்தது.
இது கடற்றொழில், நீதியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்தில் கடல்சார் அறிவியல் ஆய்வை மேற்கொள்ளவுள்ளது.
நிலைபேறான மீன்வள முகாமைத்துவத்துக்கான முக்கிய அறிவியல் தரவுகளை சேகரிப்பதற்கும், காலநிலை மாற்றத்தினால் கடல்சார் சுற்றுச்சூழல் கட்டமைப்புக்களில் எத்தகைய பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கும் இந்த கலாநிதி ஃப்ரிட்ஜோப் நென்சன் ஆய்வுக் கப்பல் உலகநாடுகளுக்கு உதவிவருகிறது.
அதன்படி 32 நாட்கள் நடைபெறும் இந்த ஆய்வில் கடல்சார் வளங்கள் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புக்களை மதிப்பிடுவதில் விசேட கவனம் செலுத்தப்படும்.
இந்த ஆய்வுப்பணியின் போது விஞ்ஞானிகள் இலங்கைக் கடற்பரப்பில் உள்ள மீள் வளங்களின் உயிர்த்திணிவு மற்றும் இயக்கத்தை மதிப்பிடுவதற்கான நீர் ஒலியியல் ஆய்வுகள், கடல் மாசுபாட்டின் அளவை மதிப்பீடு செய்தல் மற்றும் பல்லுயிர்சார் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
திறன்சார் மேம்பாடு இத்திட்டத்தின் முக்கிய அங்கமாகக் காணப்படுகின்றது. அதற்கமைய இந்த ஆய்வுப்பணி இலங்கை விஞ்ஞானிகளை சர்வதேச நிபுணர்களுடன் ஒன்றிணைத்து, அறிவியல் ஒத்துழைப்பு மற்றும் அறிவுப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க உதவும்.





