புத்தாண்டு காலத்தில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடில்லை - இறக்குமதியாளர் சங்கம் உறுதி
தற்போது துறைமுகத்திலிருந்து பொருட்களை விடுவிப்பதற்கும், நாடளாவிய ரீதியில் அவற்றை விநியோகிப்பதற்கும் அரசாங்கம் தகுந்த ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.
எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலத்தில் நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது. ஆகவே நுகர்வோர் அச்சமடையத் தேவையில்லை என்று புறக்கோட்டை அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் செயலாளர் பி. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது, சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள சூழலால் பல நாடுகள் இறக்குமதி சவால்களை எதிர் கொண்டாலும், அயல் நாடான இந்தியாவிலிருந்து 90 சதவீதமான உணவுப் பொருட்கள் தடையின்றி இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் சந்தையில் போதிய கையிருப்பு காணப்படுகிறது.
உலக சந்தையில் டொலரின் பெறுமதி அதிகரிப்பு, போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு காரணமாக சில பொருட்களின் விலைகளில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. கப்பல் கட்டணங்கள் மற்றும் கொள்கலன் வாடகைகள் அதிகரித்துள்ள போதிலும், சந்தைக்கு தேவையான பொருட்கள் தொடர்ச்சியாக இறக்குமதி செய்யப்படுகிறது. சில பருப்பு வகைகளின் வரவில் தாமதங்கள் ஏற்பட்டாலும் அவை அடுத்த 2 வாரங்களில் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் நுகர்வோர் ஒரே நேரத்தில் அதிகளவான பொருட்களை கொள்வனவு செய்து சேமிப்பதைத் தவிர்க்குமாறும், பொதுமக்கள் தேவையற்ற முறையில் பொருட்களைக் சேகரிக்கும் போது சந்தையில் செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதுடன், தேவையான பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்யவும்.
தற்போது துறைமுகத்திலிருந்து பொருட்களை விடுவிப்பதற்கும், நாடளாவிய ரீதியில் அவற்றை விநியோகிப்பதற்கும் அரசாங்கம் தகுந்த ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. அத்துடன் விலைகளை கட்டுப்படுத்த வாராந்தம் விலைப் பட்டியல்கள் கண்காணிக்கப்பட்டும் வருகிறது. பொருட்களின் தரம் மற்றும் சீரான விநியோகத்தை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
எனவே புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் எந்தவித அச்சமும் இன்றி தமக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.





