ரணிலின் பொருளாதார திட்டத்தை அரசு பின்பற்றத் தவறியுள்ளது - ஐக்கிய தேசியக் கட்சி
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தேசிய பொருளாதாரத்தை வளர்க்கும் ஒரே நோக்கத்திற்காகவே இந்த நடவடிக்கைகள் அன்று எடுக்கப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை ஒப்படைக்கும் போது 292 ரூபாவாக இருந்த டொலரின் மதிப்பு, இந்த அரசாங்கம் பதவியேற்ற 20 மாதங்களுக்குள் இன்று 354 ரூபா வரை உயர்வடைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதாரத் திட்டத்தை தற்போதைய அரசாங்கம் தொடரத் தவறியதே இதற்கு முக்கியக் காரணமாகும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கையின் நாணயம் கட்டுப்பாடின்றி வீழ்ச்சியடைந்து செல்வது தொடர்பாக தற்போதைய அரசாங்கம் எதிர்கொண்டுள்ள பாரதூரமான பிரச்சினை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி தனது பலத்த கவலைகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அரசாங்கத்திடம் தெளிவான பொருளாதாரத் திட்டம் எதுவும் இல்லாததும், நாட்டின் வெளிநாட்டு கையிருப்புகளை அதிகரிக்க அவர்கள் தவறியதுமே டொலரின் மதிப்பு மிக வேகமாக அதிகரிப்பதற்குக் காரணமாகும். உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடையும் என தனியார் துறை அச்சம் வெளியிட்டுள்ளது.
நாணய வீழ்ச்சி காரணமாக சில ஏற்றுமதித் தொழில்கள் அதிக இலாபத்தை ஈட்டிக்கொண்டாலும், மறுபுறம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக சாதாரண ஊழியர்களும் பொதுமக்களும் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்வார்கள். ஆடைத் தொழில்துறை போன்ற சில ஏற்றுமதித் துறையினர், தங்களது ஏற்றுமதி அதிகரிக்கும் என கணித்துள்ள போதிலும், சுருங்கி வரும் சர்வதேச சந்தை நிலைவரங்களை அவர்கள் கணக்கில் கொள்ளத் தவறிவிட்டனர்.
குறிப்பாக ஐரோப்பிய சந்தைகள் பெரும் அழுத்தங்களைச் சந்தித்து வருவதால், அவை தங்களது இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகின்றன. அதேபோல, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதிலேயே தனது முக்கிய கவனத்தைச் செலுத்தியுள்ளதுடன், பொருளாதாரத்தில் தற்போது கவனம் செலுத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டமை மற்றும் செங்கடல் பகுதியில் தொடரும் தாக்குதல்கள் காரணமாக கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, கப்பல் கட்டணங்கள் தொடர்ந்து உயர்வதையேக் காட்டுகிறது. எனவே, இது நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு சாதகமான ஒரு சூழல் அல்ல. ரூபாவின் பெறுமதியின் வீழ்ச்சியை ஒரு நேர்மறையான விடயமாகக் காட்டுமாறு நிறுவனங்களை அமைச்சர் அனில் ஜெயந்த ஊக்குவித்துள்ளார்.
இதற்குப் பல நிறுவனங்கள் மௌனம் காக்கின்ற போதிலும், கூட்டு ஆடை சங்கங்களின் சம்மேளனம் அமைச்சரின் கருத்தை எதிரொலிக்கும் வகையில், நாணய வீழ்ச்சியானது ஆடைத் தொழில்துறைக்கு ஒரு சாதகமான அறிகுறி என உரிமை கோரியுள்ளது. ஆடைத் தொழில்துறையானது ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன திறந்த பொருளாதாரக் கொள்கையின் ஊடாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்தத் துறையில் முதலீடு செய்ய ஊக்குவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலைகளை உருவாக்கி இத்துறையை மேலும் மேம்படுத்தினார். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தேசிய பொருளாதாரத்தை வளர்க்கும் ஒரே நோக்கத்திற்காகவே இந்த நடவடிக்கைகள் அன்று எடுக்கப்பட்டன. பொதுமக்கள் எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் இன்னல்களைப் புறந்தள்ளிவிட்டு, இலாபத்தை அதிகரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி, அரசாங்கத்தினதும் அமைச்சரினதும் கருத்துக்களை இத்துறையினர் இன்று எதிரொலிப்பது ஏமாற்றமளிக்கிறது. எனவே, ஏற்றுமதியாளர்கள் இலாபத்தை அதிகரிப்பதற்கு அப்பால் சிந்தித்து, அதிகரித்து வரும் பொருளாதார கஷ்டங்களின் சுமை தங்களது ஊழியர்கள் மீது சுமத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.





