இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கு உறுதி பூண்டுள்ளோம்: வாங் ஜுன்செங்
அடுத்த ஆண்டு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தை மேம்படுத்தல், அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பெருந்திட்டங்களை முன்னெடுக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு சீனா தொடர்ந்தும் தனது முழுமையான ஆதரவினை அளிப்பதற்கு உறுதி பூண்டுள்ளது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், ஷிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான வாங் ஜுன்செங் தெரிவித்தார்.
இலங்கைக்கு இரு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், ஷிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான வாங் ஜுன்செங் தலைமையில் 20ஆவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் நான்காவது முழுமையான அமர்வு குறித்த விளக்கவுரையை வழங்கும் நிகழ்வு 23-12-2025 அன்று ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 20ஆவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் நான்காவது முழுமையான அமர்வு நடைபெற்று நிறைவுக்கு வந்துள்ள நிலையில், ஐந்தாண்டு கால பொருளாதார அபிவிருத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது 2026ஆம் ஆண்டிலிருந்து 2030ஆம் ஆண்டு வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, 20ஆவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் நான்காவது முழுமையான அமர்வில் 15ஆண்டுகாலத்திட்டமிடலும் செயற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளமைக்கான அடிப்படைக்காரமாக இருப்பது, உலகளாவிய சவால்களை கூட்டிணைந்து எதிர்கொண்டு வெற்றிபெறுவதே நோக்கமாகும்.
சீனா, பொருளாதார ரீதியான வளர்ச்சி காணும் அதேவேளை அதனுடனான இருதரப்பு, பல்தரப்பு உறவுகளைக் கொண்டுள்ள அனைத்து நட்பு நாடுகளையும் முன்னேற்றமடையச் செய்வதே ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் பிரதான இலக்காக உள்ளது.
அந்தவகையில், இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் வரலாற்று ரீதியான இருதரப்பு உறவுகள் காணப்படுகின்றன. குறிப்பாக அரசி, இறப்பர் ஒப்பந்தமானது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு முக்கிய சான்றாக உள்ளது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் ஆறு தாசப்த இராஜதந்திர உறவுகள் பூர்த்தியாகியுள்ளன.
இந்நிலையில், இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு சீனா தொடர்ந்தும் தனது முழுமையான ஆதரவினை அளிப்பதற்கு தயாராகவே உள்ளது, குறிப்பாக இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீனாவுக்கான விஜயமும், அதன்பின்னர் பிரதமர் ஹரணி அமரசூரியவின் விஜயமும் முக்கிய மைல்கற்களாகும்.
அந்தவகையில் இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு சீனா தன்னுடைய முழுமையான ஆதரவினை அளிக்கின்றது. அதுமட்டுமன்றி, கல்வி, சுகாதாரம், புத்தாக்கம், சக்தி வளம், காலநிலை மாற்றம், நவீன தொழில்நுட்பம், டிஜிட்டல் மயமாக்கம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சீனாவின் பரஸ்பர பங்களிப்பைச் செய்வதற்கு அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது.
அந்த வகையில், ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்கவின் தலைமைத்துவத்தில் இலங்கையின் மீள்எழுச்சிக்கு சீனா தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பையும், ஆதவினையும் வழங்குவதற்கு உறுதி பூண்டுள்ளது.
மேலும் அடுத்த ஆண்டு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தை மேம்படுத்தல், அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பெருந்திட்டங்களை முன்னெடுக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேநேரம், ஷிசாங் தன்னாட்சி பிராந்தியமானது இயற்கையான வளங்களையும், பௌத்த பாரம்பரியங்களையும் கொண்டிருக்கின்றது. 2024 ஆம் ஆண்டில் இப்பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 276.5 பில்லியன் யுவானை எட்டியிருந்தது. இது தன்னாட்சிப் பகுதி நிறுவப்பட்ட 1965 ஐ விட 155 மடங்கு அதிகமாகும். அத்துடன் இப்பிராந்தியமானது சராசரியாக ஆண்டு வளர்ச்சி வீதமான 8.9 சதவீதத்தை எட்டியுள்ளமை முக்கியமான விடமாகும்.
ஆகவே பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளர் என்ற வகையில் உங்கள் அனைவரையும் அப்பிராந்தியத்துக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளுமாறும், இருதரப்பு முதலீடுகளுக்கான ஆரம்பங்களை முன்னெடுக்குமாறும் அழைப்பு விடுகின்றேன் என்றார்.





