கொழும்புத் திட்டம் அமைப்பின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழா
75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் விசேட நினைவு முத்திரையும், "Colombo Plan 75 Years – 75 Stories" எனும் விசேட நூலும் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டன.
கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75ஆவது ஆண்டு நிறைவு விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கொழும்பு Galle Face ஹோட்டலில் நடைபெற்றது.
இங்கு விசேட உரையொன்றை ஆற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய,
ஆசியாவின் பெரும்பாலான நாடுகள் சுதந்திரத்தை நோக்கிய தமது பயணத்தில், மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்திருந்த ஒரு காலகட்டத்திலேயே, அதாவது இதற்கு 75 வருடங்களுக்கு முன்னரே இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தை எமது நாட்டின் 'கொழும்பு' என்ற பெயரைக் கொண்டு அழைக்கப்படுவதும், அதற்கான உபசரிப்பை வழங்கக் கிடைத்தமையும் ஒரு நாடு என்ற வகையில் எமக்கு பெருமை சேர்க்கின்றது.
இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல், நிலையான போக்குவரத்து முறைமைகள் மற்றும் வலுவான விநியோகச் சங்கிலி வலையமைப்புகளை உருவாக்குவதற்கு முயற்சிக்கும் தற்போதைய பின்னணியில், கொழும்புத் திட்டத்தின் கீழ் இந்நாட்டின் வலுசக்தி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகால முதலீடுகள், இன்றும் இலங்கையின் அபிவிருத்தியின் அடித்தளத்தின் முக்கிய அங்கமாக விளங்குகின்றன.
அதேபோன்று, குறிப்பாக, இளைஞர்கள், பொதுச் சுகாதாரம் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை ஆகியவற்றிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கும் போதைப்பொருள் ஒழிப்பிற்காக, கொழும்புத் திட்டத்தின் 'போதைப்பொருள் ஆலோசனை நிகழ்ச்சி' ஆற்றிவரும் சேவை பாராட்டத்தக்கதாகும். ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான இலங்கை அரசாங்கம் பொதைப் பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளது. அதற்காகக் கொழும்புத் திட்டம் வழங்கும் ஒத்துழைப்பை நாம் பாராட்ட வேண்டும்.
தொழினுட்ப மாற்றங்கள், காலநிலை சவால்கள் மற்றும் புவிசார் அரசியல் செல்வாக்குகள் காரணமாக இன்றைய உலகம் 1951ஆம் ஆண்டை விட மிகவும் வித்தியாசமானதாகவும் சிக்கலானதாகவும் மாறியுள்ளது. இச்சூழலில், கொழும்புத் திட்டம் போன்ற பிராந்திய அமைப்புகளின் பங்களிப்பு தற்காலத்திற்கு ஏற்றவாறு மேலும் விரிவானதாகவும் நெகிழ்வுத்தன்மை மிக்கதாகவும் அமைய வேண்டும். அத்துடன், கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தித் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், புதிய தலைமுறையினரிடையே சர்வதேச ஒத்துழைப்பின் மதிப்பை எடுத்துரைக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.
கடந்த நான்கு வருடங்களாக கொழும்புத் திட்டம் அமைப்பின் பொதுச்செயலாளராக குறிப்பிடத்தக்க சேவையை ஆற்றி விடைபெறும் கலாநிதி பெஞ்சமின் பி. ரெய்ஸ் ஸு க்கு இதன்போது விசேட பாராட்டு வழங்கப்பட்டதோடு, கொழும்புத் திட்டத்தின் புதிய பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட சூளாமி சார்ட்சுவானும் அன்போடு வரவேற்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் விசேட நினைவு முத்திரையும், "Colombo Plan 75 Years – 75 Stories" எனும் விசேட நூலும் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலங்கைக்கான வியட்நாம் தூதுவரும் கொழும்புத் திட்டம் அமைப்பின் பேரவைத் தலைவியுமான த்ரின் தி டாம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.





