கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2ஆவது முனையத்தின் கட்டுமானப் பணிகள் வருட இறுதியில் ஆரம்பம்
ஜப்பான் அரசாங்கத்தின் 75 மில்லியன் யென் கடன் உதவியின் கீழ் ஜைகா நிறுவனத்தினால் இந்த 2 ஆவது முனையத்தின் கட்டுமானப் பணிகள் முதன்முதலில் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டன.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் 2 ஆவது பயணிகள் முனையத்தின் கட்டுமானப் பணிகளை இந்த வருட இறுதிக்குள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த கலந்துரையாடல் நேற்று துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசோமாடா தலைமையில் நடைபெற்றது.
கடன்தொகை மற்றும் ஒப்பந்த மதிப்பு ஆகியவற்றிக்கான அனுமதிகளை விரைவுபடுத்தி எதிர்வரும் நவம்பர் மாதத்துக்குள் கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாகும்.
ஜப்பான் அரசாங்கத்தின் 75 மில்லியன் யென் கடன் உதவியின் கீழ் ஜைகா நிறுவனத்தினால் இந்த 2 ஆவது முனையத்தின் கட்டுமானப் பணிகள் முதன்முதலில் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதன் கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. பின்னர் 2024 ஆம் ஆண்டில் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் கடன் நிதி பற்றாக்குறை காரணமாக 2025 மார்ச் மாதத்தில் பணிகள் மீண்டும் முடங்கின. தொடரந்து தற்போதைய அரசாங்கத்தின் மீ கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் எஞ்சிய கட்டுமானப் பணிகளை முழுமையாக நிறைவு செய்வதற்கு தேவையான மேலதிக கடன் நிதி ஒதுக்கீடுகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதன்போது அமைச்சர் அநுர கருணாதிலக்க, இந்த திட்டத்துக்குத் தேவையான கடன் தொகை குறித்து நிதி அமைச்சுடன் மிக விரைவில் கலந்துரையாடி, அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள இணக்கம் தெரிவித்தார். இது தேசிய மட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததொரு திட்டம் என்பதால், ஜனாதிபதியும் இதில் தனியான கவனத்தைச் செலுத்தியுள்ளார். எனவே, இது குறித்து ஜனாதிபதியுடன் மிக விரைவில் விசேட கலந்துரையாடல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கிடையில், முதலாவது செயல்முறையாக கடன் தொகையை உறுதிப்படுத்தி கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதையும், இரண்டாவது செயல்முறையாக கலந்துரையாடப்பட்ட விலையின் அடிப்படையில் ஒப்பந்தத்தை வழங்குவதையும் ஜைகா பிரதிநிதிகள் குழு பரிந்துரைத்துள்ளதுடன், கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து 30 மாதங்களுக்குள் ஒட்டுமொத்த திட்டத்தையும் நிறைவு செய்வதே தங்களது இலக்கு என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





