2027வரவு, செலவுத் திட்டத்தில் சொத்து வரி; அரசாங்கம் - நாணய நிதியம் கருத்து வேறுபாடு
இரண்டாவதாக, நாட்டின் சுமார் 50 இலட்சம் சொத்துக்கள் குறித்த தற்போதைய, பயன்படுத்தக்கூடிய தரவுகள் மதிப்பீட்டுத் திணைக்களத்திடம் இருக்கவில்லை.
2027ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத் திட்ட முன்மொழிவுகளில் இரண்டாம் நிலை சொத்து வரியை அறிமுகப்படுத்துவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
குறித்த விடயம் சம்பந்தமாக ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில், கூடுதலாக உள்ள அல்லது இரண்டாம் நிலை குடியிருப்பு சொத்துக்களை இலக்கு வைத்து சொத்து வரியை எதிர்வரும் வரவு,செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் யோசனை முன்வைத்துள்ளது.
இருப்பினும், 2027 வரவு,செலவுத் திட்டத்திற்கு முன்மொழியப்படும் பிற வருமான வழிமுறைகளே நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடையப் போதுமானது என்பதால் இந்த வரி தேவையில்லை என்றும், சொத்துக்களின் உரிமையாளர்கள் பற்றிய துல்லியமான தரவுத்தளங்களைத் தயாரிப்பதற்கு கணிசமான காலம் எடுக்கும் என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், 2027 வரவு,செலவுத் திட்டத்தில் இது சேர்க்கப்படாவிட்டாலும், இந்த வரியைக் அமல்படுத்துமாறு சர்வதேச நாணயநிதியம் தொடர்ந்து வலியுறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே காணப்படுகின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் 2023ஆம் ஆண்டின் ஆரம்பக்கட்ட உடன்பாட்டின்படி, 2025ஆம் ஆண்டிற்குள் வழக்கமான சொத்து வரி அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பெப்ரவரி 2024இல் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டின்போது இரு பிரதான தடைகள் கண்டறியப்பட்டன.
முதலாவதாக, 13ஆவது திருத்த சட்டத்தின்படி சொத்து தொடர்பான வரி வருமானம் மாகாண சபைகளுக்கே ஒதுக்கப்பட்டிருப்பதால், மத்திய அரசாங்கத்தால் நேரடியாக வரி விதிக்க முடியாது.
இரண்டாவதாக, நாட்டின் சுமார் 50 இலட்சம் சொத்துக்கள் குறித்த தற்போதைய, பயன்படுத்தக்கூடிய தரவுகள் மதிப்பீட்டுத் திணைக்களத்திடம் இருக்கவில்லை.
குறித்த சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, ஒருவரின் சொந்த வீட்டின் எதிர்பார்க்கப்படும் வாடகை மதிப்பை வருமானமாகக் கருதி வரி விதிக்கும் 'கற்பனை வாடகை வருமான வரஷ முறையை சர்வதேச நாணய நிதியம் ஆகஸ்ட் 2024இல் மாற்றுத் தீர்வாக முன்வைத்தது.
இது ஏப்ரல் 2025இல் அமல்படுத்தப்பட இருந்தபோதிலும், நவம்பர் 2024 தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் இது நடைமுறைக்கு சாத்தியமற்றது எனக்கூறி அதனைக் கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.





