ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருடன் அமெரிக்க தூதுவர் ஜுலி சங்க சந்திப்பு
இலங்கைக்கு அமெரிக்க முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும், ஜனாதிபதியின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிகா உடுகமசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல் கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்றது.
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளித்தல், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் இலங்கை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள 'தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கொள்கை' ஆகியவை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்த விடயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. மேலும், இலங்கைக்கு அமெரிக்க முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
அத்துடன், 'தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கொள்கையின்' கீழ், உயர்கல்வி, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் போன்ற நவீன துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளும் இதன்போது ஆராயப்பட்டன.
இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செயல்முறையை வலுப்படுத்துவதன் மூலம் அமெரிக்க சந்தைக்குள் நுழைவதற்கான புதிய வாயில்களைத் திறக்க முடியும் என்று சுட்டிக்காட்டிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இரு நாடுகளுக்கும் இடையேயான தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான உறவுகளை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.





