அடிமைத்தனத்திலிருந்து விடியலை நோக்கிய பயணம்
1963ஆம் ஆண்டு மே 25 அன்று எதியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபாவில் 32 சுதந்திர ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தினத்தைக் கூட்டாகப் பிரகடனப்படுத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 25ஆம் திகதி கொண்டாடப்படும் 'ஆபிரிக்க தினம்' என்பது வெறும் பிராந்தியக் கொண்டாட்டம் மட்டுமல்ல. அது ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு கண்டமே திரண்டெழுந்த வரலாற்றுப் பெருமிதத்தின் குறியீடாகும்.
1963ஆம் ஆண்டு மே 25 அன்று எதியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபாவில் 32 சுதந்திர ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தினத்தைக் கூட்டாகப் பிரகடனப்படுத்தினர்.
தற்போது காம்பியா, கினி, ஈக்குவற்றோரியல் கினி, லெசத்தோ, மாலி, மொரிற்றானியா, நமீபியா, சாம்பியா, ஜிம்பாப்வே உள்ளிட்ட பல நாடுகளில் இது பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டு, மக்கள் நடனமாடியும் விவாதித்தும் இதனை எழுச்சியுடன் கொண்டாடினர்.
ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைமையகமான அடிஸ் அபாபாவில் மூன்று நாட்கள் விசேட நிகழ்வுகள் நடப்பது ஒருபுறமிருக்க, கடந்த இரு பத்தாண்டுகளாக ரஷ்யா போன்ற ஆபிரிக்காவுக்கு வெளியிலுள்ள நாடுகளிலும் இத்தினம் நினைவுகூரப்பட்டு வருகின்றமை இதன் உலகளாவிய முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
ஆபிரிக்காவின் விடுதலை வரலாற்றை அதன் உன்னத தலைவர்களைக் குறிப்பிடாமல் பேசிவிட முடியாது. கானாவின் குவாமே நக்ரூமா, எதியோப்பியாவின் ஹைலி செலாசி, எகிப்தின் கமால் அப்துல் நாஸர், செனகலின் லியோபோல்ட் செடார் செங்கோர், தான்சானியாவின் ஜூலியஸ் நெய்ரேரே, கென்யாவின் ஜோமோ கென்யாட்டா, கினியின் அகமட் செகுதுரே போன்ற தீர்க்கதரிசனமிக்க தலைவர்கள் அன்று அடிஸ் அபாபாவில் ஒன்றிணைந்தனர்.
அன்று உருவாக்கப்பட்ட 'ஆபிரிக்க ஐக்கிய நாடுகள்' அமைப்பின் முதல் தலைவராக எதியோப்பிய அதிபர் ஹைலி செலாசி பொறுப்பேற்றார். காலனித்துவத்திற்கு எதிரான கூட்டுப் போராட்டமாகவும், உறுப்பு நாடுகளின் இறைமையைப் பாதுகாப்பதே இதன் உடனடி இலக்காகவும் இருந்தது.
காலவோட்டத்தில், 1963இல் 'ஆபிரிக்க ஐக்கிய நாடுகள்' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வரலாற்றுப் பூர்வ அமைப்பு, 2002ஆம் ஆண்டில் ஆபிரிக்க ஒன்றியமாக மறுவடிவம் பெற்றது. அன்று சில நாடுகளுடன் தொடங்கிய இந்த அமைப்பில் தற்போது 55 சுதந்திர நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
உலகில் மனிதகுலம் தோன்றுவதற்குக் காரணமான, இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கும் ஆபிரிக்கக் கண்டம் இன்று எதிர்கொள்ளும் ஆகப்பெரிய முரண்பாடு அதன் மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமைதான்.
சுதந்திரம் என்பது அரசியல் சாசன உரிமை மட்டுமல்ல, அது மக்களின் வாழ்வாதார உரிமையும்கூட. ஆனால், ஆபிரிக்காவில் இன்றுவரை மில்லியன் கணக்கான மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் எட்டாக்கனியாகவே உள்ளன.
இக்குறைபாடு மக்களின் ஆரோக்கியத்தைப் பாதித்து, நேரடியாக நாட்டின் உற்பத்தித் திறனைக் குறைப்பதுடன், உணவுப் பாதுகாப்புக்கும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இயற்கைப்பேரிடர்கள் ஒருபுறமிருக்க, சூடானில் நிலவும் உள்நாட்டுப்போர், கொங்கோ ஜனநாயகக் குடியரசின் நீடிக்கும் மோதல்கள், சாஹெல் பிராந்தியத்தில் அரங்கேறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் அதன் விளைவான பாரிய இடப்பெயர்வுகள் மக்களைத் தொடர் வறுமைக்குள்ளும் பட்டினிக்குள்ளும் தள்ளியுள்ளன.
ஆபிரிக்காவின் இன்றைய பின்தங்கிய நிலைக்கு அதன் கடந்தகால வரலாற்றுச் சுரண்டல்களே முக்கிய காரணம். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்டுவிட்ட போதிலும், கண்டம் கடந்த அடிமை வர்த்தகம் மனித வரலாற்றில் ஏற்படுத்திய வடுக்கள் மாறாதவை. மனிதர்களை வெறும் மந்தைகளைப்போல இரும்புச்சங்கிலிகளால் பிணைத்து, கப்பல்களில் ஏற்றி, மேலைநாட்டுக் கடைத்தெருக்களில் ஏலம் விட்டு விற்ற கொடுமை உலக வரலாற்றின் அழிக்க முடியாத அவமானம்.
அத்துடன் நில்லாது, மேலைநாடுகள் ஆபிரிக்க மண்ணில் நடத்திய காட்டாட்சியும், நிகழ்த்திய படுகொலைகளும், கொள்ளையடித்த இயற்கைச் செல்வங்களும் இன்றும் அக்கண்டத்தின் வளர்ச்சியை முடக்கியுள்ளன.
கடந்த காலக் கொடுமைகளுக்காக இன்று சில மேலை நாடுகள் ஒப்புக்கு மன்னிப்புக் கேட்டிருந்தாலும், உண்மையான நீதி இன்னும் வழங்கப்படவில்லை. கொள்ளையடிக்கப்பட்ட ஆபிரிக்காவின் விலைமதிப்பற்ற கலைப் பொருட்களும் செல்வங்களும் இன்னும் முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை என்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொருளாதார இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை.
'தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி' என்பதற்கு இணங்க, ஆபிரிக்க ஒன்றியம் கடந்த ஆண்டு 'ஆபிரிக்க மக்களுக்கும் அவர்களின் வம்சாவளியினருக்கும் இழப்பீடுகளைப் பெற்றுத் தருதல்' என்ற இலக்கை நிர்ணயித்தது.
கானாவின் முன்னெடுப்பில், கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு வரலாற்றுப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இப்பிரேரணை, அடிமை வர்த்தகத்தை 'மனிதகுலத்திற்கு எதிரான மிக மோசமான குற்றச்செயல்' என்று அதிகாரபூர்வமாகப் பிரகடனப்படுத்தியது.
இருப்பினும், மேலைநாடுகளின் அணுகு முறை இன்னும் மாறவில்லை. இழப்பீடு என்ற பேச்சுக்கே இடமில்லையென அமெரிக்கா கையை விரித்துவிட்ட சூழலில், முன்னைய அரசுகளின் செயல்களுக்கு தற்போது அரசுகள் பொறுப்பேற்க முடியாதென பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தட்டிக்கழிக்கின்றன.
ஆபிரிக்காவின் செல்வத்தைச் சுரண்டி தங்களைக் கோடீஸ்வர நாடுகளாக மாற்றிக்கொண்ட முன்னாள் காலனித்துவ நாடுகள், இன்றும் அதே மேலாதிக்கச் சிந்தனையில் பிதற்றுவது காலத்தின் பெருங்கொடுமையாகும்.
இத்தகைய வரலாற்றுச் சுரண்டல்களால் உருக்குலைந்த ஆபிரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, தற்போதைய உலகளாவிய காலநிலை நிதியுதவிகள் மற்றும் சர்வதேச வர்த்தகக் கொள்கைகளில் பாரிய சீர்திருத்தங்கள் அவசியமாகின்றன. மேலைநாடுகள் வழங்கும் வெறும் மனிதாபிமான உதவிகள் மட்டும் இக்கண்டத்தின் நிலையான வளர்ச்சிக்கு என்றும் தீர்வாகாது.
மாறாக, ஆபிரிக்க நாடுகளின் உள்நாட்டு உற்பத்திகளைப் பெருக்கவும், அவர்களின் இயற்கை வளங்களை அவர்களே முழுமையாகச் சுயாதீனத்துடன் நிர்வகிக்கவும் உலக நாடுகள் வழிவகை செய்ய வேண்டும். அப்போதுதான் உண்மையான இறையாண்மை சாத்தியமாகும்.
நிகழ்கால உலகம் தொழில்நுட்பத்தில் விஸ்வரூபமெடுத்து, மனிதன் செவ்வாய்க் கிரகத்தில் குடியேறுவதைப் பற்றித் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், ஆபிரிக்க மக்கள் இன்னும் ஒரு குடம் சுத்தமான குடிநீருக்காக மைல் கணக்கில் நடக்க வேண்டியிருப்பது உலகளாவிய ரீதியில் ஒரு கொடூரமான முரண்நகையாகும்.
இந்த அவல நிலையை மாற்றியமைக்க, நிலைபேறான நீர் வசதியையும் அடிப்படை சுகாதாரத்தையும் 2063ஆம் ஆண்டிற்கிடையில் அனைத்துக் குடிமக்களுக்கும் உறுதி செய்வதை தனது இலக்காக ஆபிரிக்க ஒன்றியம் இந்த வருடத்தில் பிரகடனம் செய்துள்ளது. இந்த இலக்கை அடைவதற்கான முயற்சிகளைச் சகல நாடுகளும் தற்போது தீவிரமாக முடுக்கி விட்டுள்ளன.
அடிஸ் அபாபாவில் 1963இல் கூடி ஆபிரிக்க தினத்தைப் பிரகடனப்படுத்திய வரலாற்றுத் தலைவர்கள் யாரும் இன்று உயிரோடு இல்லை. ஆனால், காலனித்துவத்திற்கு எதிராக அவர்கள் விதைத்துச் சென்ற ஒற்றுமை, சுயசார்பு மற்றும் சுதந்திரச் சிந்தனை இன்றும் ஆபிரிக்கக் கண்டம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.
கடந்த கால அநீதிகளுக்குப் போராடும் அதேவேளையில், தங்களின் எதிர்காலத்தைத் தங்களின் சொந்த உழைப்பாலும் ஒற்றுமையாலும் கட்டியெழுப்ப ஆபிரிக்க நாடுகள் தயாராகி வருகின்றன. அந்தப் புதிய விடியலே ஆபிரிக்க தினத்தின் உண்மையான வெற்றியாக அமையும்.





