நிகழ்நிலை பாதுகாப்பும் மனித உரிமைகளும் சமாந்தரமாக முன்னோக்கி பயணிக்க வேண்டும்: கனடா வலியுறுத்து
மனித உரிமைகளை பாதிக்காத வண்ணம் சமூக வலைத்தள செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நிகழ்நிலை பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் ஆகிய இரண்டும் சமாந்தரமாக முன்னோக்கி பயணிக்க வேண்டும் என குறிப்பிட்ட கனடிய உயர்ஸ்தானிகரகத்தின் இரண்டாம்நிலை செயலாளர் பற்ரிக் பிக்கரிங்,இலங்கையில் பாதுகாப்பான டிஜிட்டல் இடைவெளி மற்றும் ஜனநாயக கோட்பாடுகளை மேம்படுத்துவதற்கான முழுமையான ஒத்துiழைப்பை வழங்குவதற்கு கனடா தயாராகவிருப்பதாக உறுதியளித்தார்.
கனேடிய உயர்ஸ்தானிகரகத்தில் நிதிப்பங்களிப்பின் கீழ் பெக்ட்ரம் அமைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ள இணைய வெளியீடுகளுக்கு பாதகம் விளைவிக்கும் சட்டங்களால் ஏற்படும் தீங்கான தாக்கங்கரள குறைப்பதற்கான கொள்கை பரிந்துரை அறிக்கையின் வெளியீட்டு நிகழ்வு 25-02-2026 அன்று கொழும்பில் உள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.
சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய தளங்கள் உள்ளிட்ட நிகழ்நிலை ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பதிவுகள் சமூகத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி வரும் நிலையில்,அவற்றை ஒழுங்குப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படும் சட்டங்கள் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளில் பல்வேறு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
இது குறித்து பெக்ட்ரம் அமைப்பினால் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள், இணையத்தள நிர்வாகிகள், உள்ளடக்க நிர்வாகிகள் மற்றும் ஆதிவாசி சமூகப் பிரதிநிதிகளுடன் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மற்றும் இலங்கையின் தற்போதைய சட்டக்கட்டமைப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடுத்து மனித உரிமைகளை பாதிக்காத வண்ணம் சமூக வலைத்தள செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையின் வெளியீட்டு நிகழ்வில் தொடக்கவுரையாற்றிய பெக்ட்ரம் அமைப்பின் பணிப்பாளர் மந்தனா இஸ்மாயில்,உலகளாவிய ரீதியில் டிஜிட்டல் நிர்வாகம் என்பது முக்கிய பேசுபொருளாக மாறிவரும் அதேவேளை இலங்கையும் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகரும் இவ்வேளையில் பாதுகாப்பான டிஜிட்டல் தளங்களின் பிரயோகம் குறித்து பேச வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக நிகழ்நிலைக்காப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட வேளையில் அதுகுறித்து முறையானதும்,பரந்துப்பட்டதுமான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படாமை மற்றும் நிகழ்நிலைக்காப்பு ஆணைக்குழு தொடர்பில் நிலவும் கரிசணைகள் என்பன பற்றி பிரஸ்தாபித்த அவர்,அக்குறைபாடுகளை திருத்தியமைப்பதற்கு ஏதுவான முக்கிய பரிந்துரைகள் இவ்வறிக்கையில் உள்வாங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து உரையாற்றிய கனடிய உயர்ஸ்தானிகர அதிகாரி பற்ரிக் பிக்கரிங்,இன்றளவில் டிஜிட்டல் பாதுகாப்பு என்பது மிக முக்கிய விடயமாக மாறியிருக்கும் பின்னணியின் கருத்துச்சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் டிஜிட்டல் தளத்தை ஒழுங்கமைத்தல் மற்றும் சிவில் இடைவெளியை பாதிக்காத வகையில் நலிவுற்ற தரப்பினரை பாதுகாத்தல் என்பவற்றுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் நிகழ்நிலை பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் ஆகிய இரண்டும் சமாந்தரமாக முன்னோக்கிப் பயணிக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர் இலங்கையில் பாதுகாப்பான டிஜிட்டல் இடைவெளி மற்றும் ஜனநாயக கோட்பாடுகளை மேம்படுத்துவதற்கான முழுமையான ஒத்துiழைப்பை வழங்குவதற்கு கனடா தயாராகவிருப்பதாக உறுதியளித்தார்.





