அமரகீர்த்தி அத்துக்கோரள கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல - நுவான் போபகே
விசாரணைகள், வீடியோ ஆதாரங்கள் அல்லது தொலைபேசி சிக்னல்கள் ஊடாக, சம்பவங்கள் நடந்த இடத்துக்கு அருகாமையில் இவர்கள் நடமாடினார்கள் என்ற அடிப்படையிலேயே இவர்களில் அதிகமானோர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரளவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரும் குற்றவாளிகள் அல்ல. அவர்களுக்கு எதிராக முறையான ஆதாரங்கள் இன்றி தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரும் சட்டத்தரணியுமான நுவான் போபகே தெரிவித்தார்.
இந்நிலையில் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் சிவில் செயற்பாட்டாளர்களும் இணைந்து நேற்று முன்தினம் (09) கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ஊடக சந்திப்பில் தண்டனை வழங்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சட்டத்தரணி நுவான் போபகே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது, பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 பேருக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மே 09 ஆம் திகதி இலங்கையில் பல்வேறு இடங்களில் அசாதாரண சம்பவங்கள் இடம்பெற்றதை நாம் அறிவோம். அந்தச் சம்பவங்கள் அனைத்தும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீது தொடுக்கப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக மக்கள் காட்டிய தன்னெழுச்சியான எதிர்வினைகளாகவே அமைந்தன.
மக்கள் போராட்ட காலம் முழுவதும் போராட்டக்காரர்கள் எவரும் எவரையும் கொலை செய்யவில்லை. எவரும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை. இதன்காரணமாகவே அந்தப் போராட்டம் உலகம் முழுவதும் 'அன்பின் போராட்டம்' என்று போற்றப்பட்டது. விசேடமாக, தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர்கள் யாரையும் கொலை செய்தார்கள் என்பதற்கு கண்கண்ட சாட்சியங்களோ அல்லது நேரடி ஆதாரங்களோ கிடையாது.
விசாரணைகள், வீடியோ ஆதாரங்கள் அல்லது தொலைபேசி சிக்னல்கள் ஊடாக, சம்பவங்கள் நடந்த இடத்துக்கு அருகாமையில் இவர்கள் நடமாடினார்கள் என்ற அடிப்படையிலேயே இவர்களில் அதிகமானோர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர். இது நீதியானதல்ல. வெறும் சந்தேகத்தின் அடிப்படையிலும் சம்பவ இடத்துக்கு அருகில் இருந்தார்கள் என்ற காரணத்துக்காகவும் இவர்களுக்கு மரண தண்டனை போன்ற உச்சகட்ட தண்டனை வழங்கப்பட்டிருப்பது கவலைக்குரியது.
எனவே, இந்த விடயத்தில் உண்மையான நீதி நிலைநாட்டப்பட வேண்டும். தண்டனை வழங்கப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்பதை வலியுறுத்திக் கூறுகிறோம். அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என்றார்.





