அவசரகால சட்டத்தை நீடிப்பதில் பயனில்லை: மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம்
உடுநுவர பிரதேசத்துக்கு அண்மைய கிராமம் ஒன்று அனர்த்ததில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் சாதாரண சட்டத்தின் கீழ் செய்ய முடியுமான நடடிக்கைகளையும்கூட, அவசரகால சட்டத்தை காரணம் காட்டி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்கிறது. அதனால் அவசரகால சட்டத்தை நீடிப்பதில் எந்த பயனும் இல்லை. அதனை நீக்கிக்கொள்ள வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 06-02-2026 அன்றுஇடம்பெற்ற தித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அவசர அனர்த்த சேவையை மேற்கொள்ளவும் அத்தியாவசிய சேவை ஆணையாளர் ஒருவரை நியமித்துக்கொள்ளும் தேவை இருப்பதால், இந்த அவசரகால சட்டத்தை தொடர்ந்து நீடித்துக்கொள்ள தேவைப்படுவதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. என்றாலும் அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் அனர்த்த நிலைமை ஒன்றை அறிவிப்பு செய்திருந்தால், இந்த விடயங்களை செய்வதற்கு அதில் இடவசதி இருக்கிறது.
அனர்த்த நிலைமைகளின்போது அவசரகால சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், அதனை தவறான முறையில் வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் அபாயம் இருப்பதால்தான் அனர்த்த முகாமைத்துவ சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.ஆனால் அதனை பயன்டுத்தாமல், அவசரகால சட்டத்தை பயன்படுத்தி, பல்வேறு வகையில் அடக்குமுறைகளை மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்பதை நாங்கள் பல தடவைகள் சுட்டிக்காட்டி இருக்கிறோம்.
அதேநேரம் அரசாங்கம் அவசரகால சட்டத்தை அமல்படுத்திக்கொண்டு, தற்போது அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா என கேட்கிறோம். ஆனால் அரசாங்கம் சாதாரண சட்டத்தின் கீழ் செய்ய முடியுமான நடடிக்கைகளையும்கூட, அவசரகால சட்டத்தை காரணம் காட்டி இன்னும் செய்யாமல் இருக்கிறது. எடுத்துக்காட்டால் உடுநுவர பிரதேசத்தில் மொனர கல்மலை, சிதுரங் மலை போன்ற இடங்களில் கல்லு வெடி மேற்கொண்டுவருவதால், அந்த பிரதேசம் பாரிய அனர்த்தங்களுக்கு உள்ளாகி வருகின்றன. இது தொடர்பில் பிரதேச மக்கள் ஜனாதிபதிக்கு டிசம்பர் மாதம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளபோது.
இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் அந்த இடத்தை பார்வையிட இதுவரை செல்லவில்லை. இந்த நடவடிக்கைக்கு உடுநுவர பிரதேச சபை அதிகாரிகள் அனுமதி வழங்கி இருக்கிறார்கள். மண்சரிவு, நிலம் நடுக்கம் போன்ற சம்பவங்கள் இந்த பிரதேசத்தில் ஏற்படுவதற்கு இந்த கல்லுவெடி நடவடிக்கையும் காரணமாகும். அதனால் அவசரகால சட்டத்தை வைத்துக்கொண்டு, சாதாரண சட்டத்தையும் செயற்படுத்தாமல் இருக்கும்போது, அரசாங்கத்துக்கு எதிராக விமர்சனங்கள் தெரிவிப்பது நியாயமானதாகும்.
அதேபோன்று உடுநுவர பிரதேசத்துக்கு அண்மைய கிராமம் ஒன்று அனர்த்ததில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பிரதேசத்துக்கும் கட்டிட ஆராய்ச்சி அதிகாரிகள் சென்று பார்வையிடாமல், அந்த மக்களுக்கு நிவாரணங்கள் எதுவும் கிடைக்காத நிலையில், அந்த மக்கள் போராட்டம் ஒன்றுக்கு தயாராகும்போதுதான் அதிகாரிகள் அந்த இடத்துக்கு சென்றுள்ளனர். அப்படியானால் அவசரகால சட்டத்தை பயன்படுத்திக்கொண்டு அரசாங்கம் என்ன செய்கிறது..இந்த நடவடிக்கைகளுக்கு அவசரகால சட்டம் தேவையில்லை. சாதாரண சட்டம் போதுமானதாகும்.
அதனால் அவசரகால சட்டத்தை நீடிப்பதில் எந்த பயனும் இல்லை. அதனால் அதனை நீக்கிக்கொள்ள வேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம். தொடர்ந்தும் அவசரகால சட்டத்தை பயன்படுத்து தொடர்பில் எமது எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்,





