சட்டம் மற்றும் நீதிமன்றத்தின் முன்னால் அனைவரும் சமம் - அமைச்சரவை பேச்சாளர்
சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமானவர்கள். ஒருவர் மதத் தலைவராகவோ பௌத்த பிக்குவாகவோ அல்லது மதப் பிரிவைச் சேர்ந்தவராகவோ இருக்கிறார் என்பதற்காகச் சட்டம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது.
பௌத்த பிக்குகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் குறித்துச் சட்டமும் பொலிஸ் விசாரணைகளும் நடுநிலையாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சட்டம் மற்றும் நீதிமன்றத்தின் முன்னால் அனைவரும் சமமானவர்கள். ஒருவர் பௌத்த பிக்குவாகவோ அல்லது மதத் தலைவராகவோ இருக்கிறார் என்பதற்காகச் சட்டம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கிய பதிலில், இலங்கையில் உள்ள பௌத்த பிக்குகள் சுமார் 300 பேருக்கு எதிராகச் சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளதாகவும், ஆனால் அதில் 27 பேருக்கு எதிராக மாத்திரமே வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 02-06-2026 அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்தச் சம்பவங்கள் தொடர்பாகப் பொலிஸாரே முழுமையான விசாரணைகளை முன்னெடுத்தனர். பொலிஸாருக்குப் புகார் கிடைத்தவுடன் அவர்கள் விசாரணைகளை நடத்தி, வாக்குமூலங்களைப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்து, சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். அதேபோல, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை என்பது ஒரு அரச சார்பற்ற நிறுவனம் அல்ல் அது அரசாங்கத்தின் ஒரு அங்கமாகும். எனவே, அரசாங்கத்தின் அதிகாரிகளும் நிறுவனங்களுமே இந்த விசாரணைகளை முன்னெடுத்து, ஊடகங்கள் வழியாகவும் தகவல்களை வெளியிட்டனர்.
சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமானவர்கள். ஒருவர் மதத் தலைவராகவோ பௌத்த பிக்குவாகவோ அல்லது மதப் பிரிவைச் சேர்ந்தவராகவோ இருக்கிறார் என்பதற்காகச் சட்டம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது. எவராவது சட்டத்திற்குப் புறம்பாக தமக்குக் கூடுதலாகச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்த்தால், எமது சட்டக் கட்டமைப்பில் அதற்கு இடமில்லை. அதேபோல சட்டம் குறைவாகச் செயற்படவும் மாட்டாது. எமது அரசாங்கத்தின் கீழ் சட்டம் அனைத்து நபர்களுக்கும் பொதுவானதாகவும், நடுநிலையானதாகவும் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும். அதன் அடிப்படையிலேயே இந்த விசாரணைகளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
பௌத்த பிக்குகள், அதனுடன் தொடர்பான சட்டங்கள் மற்றும் நீதிமன்றங்கள் குறித்த தீர்மானங்களை எடுக்கும்போது, மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சங்க சபைகளின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின்படியே சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அவர்களின் தரப்பிலிருந்தும் இது குறித்துப் பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்கள் அவ்வப்போது எழுகின்றன. அதன் அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்பட எதிர்பார்க்கிறது. அமைச்சரவையின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் இந்த தீர்மானங்களை எடுக்க முடியாது என்றார்.





