எந்தவொரு பிரஜையினதும் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸாரால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: பொலிஸ் பேச்சாளர்
எதிர்வரும் தினங்களில் மிக விரைவில் இந்த விசாரணைகளை நிறைவு செய்ய முடியும் என்று நம்புகின்றோம்.
அக்குரேகொட பிரதேசத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி கொலை தொடர்பான விசாரணைகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. நாட்டில் சட்டத்தரணிகள் மாத்திரமின்றி, எந்தவொரு பிரஜைக்கும் தமக்குள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடளிக்க முடியும். அதற்கமைய பொலிஸாரால் அச்சுறுத்தல் மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 24-02-2026 அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொல்லப்பட்டு 3 நாட்களில் பிரதான துப்பாக்கிதாரி உள்ளிட்ட 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மூவர் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, ஏனைய இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எதிர்வரும் தினங்களில் மிக விரைவில் இந்த விசாரணைகளை நிறைவு செய்ய முடியும் என்று நம்புகின்றோம். நாட்டில் எந்தவொரு பிரஜையும் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கருதினால், அல்லது வேறு பிரச்சினைகள் காணப்படுமாயின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அவை தொடர்பில் முறைப்பாடளிக்க முடியும்.
உயிர் அச்சுறுத்தல் காணப்படுமாயின் அது தொடர்பில் அச்சுறுத்தல் மதிப்பாய்வு முன்னெடுக்கப்படும். எனவே எந்தவொரு பிரஜையும் தமக்கான உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை என்றார்.





