மலையக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை அரசுக்கு நிறைவேற்ற முடியாது போயுள்ளது - சஜித் சஞ்சய பெரேரா
இந்த நஷ்டத்தை அரசாங்கம் ஏற்பதாக கூறினாலும் அது அரசாங்கம்தானே. சமூகம் தொடர்பில் கதைத்து வந்தவர்கள் இப்போது எப்படி வீடுகளை அமைக்கின்றனர்.
தித்வா புயல் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட தோட்டப்பகுதி மக்கள் இன்னும் கூடாரங்களிலேயே இருக்கின்றனர். அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது. இந்நிலையில் ஜனாதிபதியின் நிவாரண பொதி மக்களுக்கு கிடைக்குமாவென தெரிவிக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 08-04-2026 அன்று இடம்பெற்ற நாடடின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மத்திய கிழக்கில் யுத்த நிலைமை ஆரம்பிக்கப்பட்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் நெருக்கடிகள் தொடர்பில் பல்வேறு யோசனைகளை முன்வைத்து, அதற்கு முகம்கொடுக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். ஆனால் அவரின் யோசனைகளை அரசாங்கம் நிராகரித்து வந்தது.
எவ்வாறாயினும் அவரால் கூறப்பட்ட நிவாரணத் திட்டங்களையே இப்போது அரசாங்கத்திற்கு செயற்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர் தனது கோரிக்கைகளை முன்வைக்கும் போது உங்களின் யோசனைகள் எங்களுக்கு தேவையில்லை என்று கூறியவர்கள் இன்று அவரின் யோசனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டி வந்துள்ளது.
தித்வா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்ட போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள்; அமைத்துக்கொடுக்ககப்படவில்லை. மண்சரிவு ஏற்பட்ட தோட்டப் பகுதிகளில் இன்னும் கூடாரங்களில் இருக்கின்றனர். அந்த மக்களுக்கு தோட்டங்களில் காணிகளை தேடுமாறு கூறுகின்றனர்.
அவர்களுக்கு வெளியிடங்களில் காணிகளை ஏன் வழங்க முடியாது? டித்வா புயல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளையே இப்போதும் ஜனாதிபதி கூறுகின்றார். இது நடக்குமா என்று தெரியவில்லை.
இப்போது மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது யுத்தத்தால் ஏற்பட்டது அல்ல. இந்த நிலைமை தரமற்ற நிலக்கரி மோசடியால் உருவானது. இதனை அப்பாவி மக்களே சுமக்க வேண்டியுள்ளது. இந்த நஷ்டத்தை அரசாங்கம் ஏற்பதாக கூறினாலும் அது அரசாங்கம்தானே. சமூகம் தொடர்பில் கதைத்து வந்தவர்கள் இப்போது எப்படி வீடுகளை அமைக்கின்றனர்.
மற்றையவர்கள் வீடுகளை நிர்மாணித்தால் அது திருட்டு என்று கூறுகிறவர். ஆனால் தாங்கள் நிர்மாணித்தால் அதில் பிரச்சினையில்லை என்பது போன்று கதைக்கின்றனர். இவர்கள் கூறுவதை நம்ப முடியாமல் இருக்கின்றது என்றார்.





