இந்தியா சென்று திரும்பிய மூன்று ஈரானிய கப்பல்களில் ஒன்று மாயம் - விமல் வீரவன்ச
நாம் எந்தவொரு நாட்டுக்கும் விசேட நண்பர்களாகவும் தேவையில்லை, எந்தவொரு நாட்டுக்கும் எதிரிகளாகவும் தேவையில்லை.
இந்தியாவில் இடம்பெற்ற கடற்படை கப்பல் கண்காட்சி அணிவகுப்பில் மூன்று ஈரானிய கப்பல்கள் பங்கேற்றன. அவற்றில் ஒன்றே தாக்குதலுக்குள்ளானது. எஞ்சிய இரண்டில் ஒரு கப்பலுக்கு என்ன ஆனது என்பதே தெரியாமலுள்ளது. பாணந்துறைக் கடலை அண்மித்த கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வர அனுமதி கோரியுள்ள போதிலும், அமெரிக்காவின் அழுத்த காரணமாக இலங்கை மௌனமாகவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சுமத்தினார்.
கொழும்பில் 05-03-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மத்திய கிழக்கு உள்ளிட்ட முழு உலகும் பாரதூரமான யுத்தத்தை எதிர்கொண்டுள்ளது. தற்போது அந்த பிரச்சியை இலங்கையையும் அண்மித்துள்ளது. ஈரானின் ஒரு கப்பல் பற்றி மாத்திரமே ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன.
இந்தியாவில் இடம்பெற்ற கடற்படை கப்பல் அணிவகுப்பில் பங்கேற்பதற்காக ஈரானின் மூன்று கப்பல்கள் வருகை தந்துள்ளன. அந்த மூன்றில் ஒரு கப்பல் தொடர்பில் மாத்திரமே தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மற்றொரு கப்பலுக்கு என்ன நடந்தது என்பது யாரும் தெரியாது. எஞ்சிய மற்றைய கப்பல் பாணந்துறை கடற்பரப்பை அண்மித்த எமது சர்வதேச கடற்பரப்பிற்கு அருகில் காணப்படுகிறது. அது ஆழமான கடலும் அல்ல. ஆழமான கடலில் மாத்திரமே நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்களை மேற்கொள்ள முடியும். இந்த மூன்றாவது கப்பல் ஆழ்கடலில் இல்லை என்பதால், நீர்மூழ்கிக்க கப்பல் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது.
இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருவதற்கு ஈரான் தூதரகத்தின் ஊடாக அனுமதி கோரியுள்ளது. பாணந்துறை கரையிலிருந்து அவதானிக்கும் போது குறித்த கப்பல் தென்படுகிறது. குறித்த கப்பல் கரையிலிருந்து 12 கடல் மைல் தொலைவிலேயே காணப்படுகிறது. புதன்கிழமை மாலை முதல் கொழும்பு துறைமுகத்துக்கு வருவதற்கு அனுமதி கோரப்படுகின்ற போதிலும், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
ஈரானுக்கு எதிரி நாட்டின் தூதரகத்தினால் கொழும்பு துறைமுக அதிகாரிகளுக்கும், அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்துக்கு அனுமதிக்க வேண்டாம் என்றும், அவ்வாறு அனுமதித்தால் தாம் வான்வழி தாக்குதலை நடத்துவோம் என்றும் அத்தூதரகம் எச்சரித்துள்ளது.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற போது, எமக்கு வேறு நாடுகள் ஆயுதங்கள் வழங்க மறுத்த போது, ஈரான் விமானங்கள் ஊடாக குண்டுகளையும், ஆயுதங்களையும் வழங்கிய நாடாகும்.
மத்திய கிழக்கில் இன்றும் எமது தேயிலையில் 50 - 60 வீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதில் அதிக பங்கினை ஈரான் இறக்குமதி செய்கிறது. சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம், உமா ஓயா திட்டம் உள்ளட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு பல தடைகளுக்கு மத்தியிலும் ஈரான் எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறது. ஆனால் அந்த நாட்டு கப்பல் இன்று பாதுகாப்புக்காக தஞ்சம் கோரும் நிலையில், அமெரிக்க தூதரகத்துக்கு அஞ்சி இலங்கை அரசாங்கம் அனுமதி மறுக்கின்றது.
ஜனாதிபதி இன்னும் இது குறித்த இறுதி தீர்மானத்தை எடுக்கவில்லை. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அமெரிக்காவுக்கு எவ்வாறான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் தெரியாது. இந்தியாவின் அழைப்பின் பேரில் குறித்த கப்பல் கண்காட்சி அணி வகுப்பில் பங்கேற்று நாடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்து சமுத்திரத்தில் ஒரு கப்பல் தாக்குதலுக்குள்ளாகியுள்ள நிலையில், மற்றொரு கப்பலுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமலுள்ளது.
உண்மையில் ஜனாதிபதி தைரியமான ஒருவராக இருந்தால், இந்த கப்பல் எவ்வித போர் நடவடிக்கைகளுக்காகவும் கொழும்பு துறைமுகத்துக்கு வர அனுமதி கோரவில்லை, அதற்கு நாம் இடமளிக்கப் போவதுமில்லை, சேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே அனுமதி கோரப்படுகிறது என அமெரிக்க தூதரகத்துக்கு அறிவிக்க முடியும்.
சேவை தேவைகளை நிறைவு செய்து கொண்டு எமது கடல் எல்லையை தாண்டிய பின்னர் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என ஜனாதிபதியால் நேரயடிhகக் கூற முடியும். அவ்வாறு நேரடியாகக் கூறும் நிலையில் நாம் இல்லை என்றால், எமது நாடு மறைமுகமாக ஒரு தரப்பினருக்கு பக்க சார்பாக செயற்படுகின்றதல்லவா?
நாம் எந்தவொரு நாட்டுக்கும் விசேட நண்பர்களாகவும் தேவையில்லை, எந்தவொரு நாட்டுக்கும் எதிரிகளாகவும் தேவையில்லை. மத்திய கிழக்கிலுள்ள சகல அமெரிக்க முகாம்களும் அழிக்கப்பட்டுள்ளன. ரேடார் கட்டமைப்புக்களும் அழிக்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு வசதிகளை வழங்குவதற்கு எவ்வித வாய்ப்புக்களும் இல்லை.
எனவே இந்து சமுத்திரத்துக்கு மிக அருகிலுள்ள இந்தியா மற்றும் இலங்கையிடம் அந்த சேவைகளைப் பெற்றுக் கொள்வதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும். எனவே அணிசேரா கொள்கையை கடுமையாக பின்பற்றாவிட்டால் வல்லரசுகளின் இந்த அதிகாரப்போருக்கு இலங்கையும் இரையாக நேரிடும்.
ஆனால் இது தொடர்பில் இலங்கை சார்பில் எவ்வித ஆழமான இராஜதந்திர தலையீடுகளும் இல்லை. ஆழமான இராஜதந்திர தலையீடுகளின் அடிப்படையில் வெளிநாட்டு கொள்கைகள் தீர்மானிக்கப்படுகின்றனவா? இதற்கு முன்னர் எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறு செயற்படவில்லை. ஆட்சி பொறிமுறையின் மீதான மக்களின் நம்பிக்கை இதனால் முழுமையாக வீழ்ச்சியடையும். மாலைதீவுக்குள்ள தைரியம் கூட இலங்கைக்கு இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும் என்றார்.





