அமெரிக்காவின் மொன்டானாவுக்கு தூதுவர் மஹிந்த சமரசிங்க விஜயம்
'மொன்டானாவின் மலைப்பகுதிகள் முதல் இலங்கையின் கடற்கரைகள் வரை நாம் ஒரு பொதுவான புரிதலின் அடிப்படையில் பிணைக்கப்பட்டிருக்கிறோம்.
அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான மாநில பங்காண்மைத் திட்டத்தின் ஊடாக மேம்பட்டுவரும் இருதரப்பு உறவைப் பலப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க 31-03-2026 அன்று மொன்டானா மாநிலத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயமானது பேரிடர்கால பதில் நடவடிக்கைசார் ஒத்துழைப்பு, கல்வி மற்றும் கைத்தொழில் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தும் அதேவேளை, இருதரப்பினரும் பல தசாப்தகாலமாகக் கட்டியெழுப்பியிருக்கும் மீண்டெழும் தன்மையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்ததாக மொன்டானா தேசிய பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
'மொன்டானாவின் மலைப்பகுதிகள் முதல் இலங்கையின் கடற்கரைகள் வரை நாம் ஒரு பொதுவான புரிதலின் அடிப்படையில் பிணைக்கப்பட்டிருக்கிறோம். ஒரு பேரனர்த்தம் எம்மைத் தாக்கும்போது, அதனைக் கையாள்வதற்குரிய பதில் நடவடிக்கைகள் விரைவானவையாக இருக்கவேண்டும். அதற்கு இருதரப்பு நல்லுறவும், ஒத்துழைப்பும் வலுவானதாக இருக்கவேண்டும்' எனவும் அந்தப் படை சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்விஜயத்தின்போது 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தை அடுத்து மொன்டானா தேசிய பாதுகாப்புப்படையின் மருத்துவ நிபுணர்கள், பொறியியலாளர்கள் மற்றும் பேரனர்த்த மீட்புப்பணியாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றியமை குறித்து தூதுவர் மஹிந்த சமரசிங்க நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
இந்நிலையில் இவ்விஜயமானது இலங்கைக்கும் மொன்டானா மாநிலத்துக்கும் இடையிலான கல்வி மற்றும் கைத்தொழில் சார்ந்த ஒத்துழைப்புக்களை அடுத்த கட்டத்துக்கு விரிவுபடுத்துவதற்கான ஒரு சமிக்ஞையாக அமைந்திருப்பதாகவும் மொன்டானா தேசிய பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.





