மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு தடையில்லை - தமிழகத்திற்கு பின்னடைவை தந்த மத்திய அரசின் பதில்
பெங்களூருக்கு குடிநீர் வழங்கவும் 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் 67 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட இந்த மேகதாது திட்டம் உதவும் என கர்நாடகா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்குத் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய கீழ்மடை மாநிலங்களின் ஒப்புதலைக் கர்நாடகா பெறத் தேவையில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
இது காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
பாமக தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு, மத்திய ஜல் சக்தி துறை இணையமைச்சர் ராஜ் பூஷன் சௌதரி பதிலளித்தார்.
2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16 அன்று காவிரி நீர் தகராறு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, காவிரியின் குறுக்கே ஏதேனும் ஒரு கட்டுமானத்தை எழுப்புவதற்குப் பிற மாநிலங்களின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற எந்தவொரு நிபந்தனையும் குறிப்பிடப்படவில்லை என அமைச்சர் கூறினார்.
மத்திய அரசின் இந்த விளக்கத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், தங்களின் சொந்த நிலத்தில் அணை கட்டுவதற்கு பிற மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், மத்திய அரசின் பதிலும் தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறினார்.
இதனிடையே, இப்பிரச்சனை குறித்துத் தமிழக முதலமைச்சர் விஜய் தம்மைச் சந்திக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூருக்கு குடிநீர் வழங்கவும் 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் 67 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட இந்த மேகதாது திட்டம் உதவும் என கர்நாடகா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இருப்பினும், இத்திட்டம் நிறைவேறினால் தமிழகத்திற்கு வர வேண்டிய வழக்கமான காவிரி நீர் அளவு பாதிக்கப்படும் என்பதால் தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.





