சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்தை பாதுகாப்போம்: அமைச்சர் ஹர்ஷன
எதிர்க்கட்சித் தலைவர் பற்றியும் சமூக வலைத்தளங்களில் பல விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன.
சட்டமா அதிபரினதும், சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் சுயாதீனத்தை நாங்கள் பாதுகாப்போம். இருப்பினும் எவரும் சட்டவிரோதமான முறையில் செயற்பட்டால் பாரபட்சமில்லாமல் உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம். எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. அனைவரும் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 23-01-2026 அன்று நடைபெற்ற அமர்வின் போது சட்டமா அதிபர் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: சட்டமா அதிபரினதும் சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் சுயாதீனத்துக்கு தனித்து முன்னிலையாகவில்லை. 159 உறுப்பினர்கள் உட்பட ஜனாதிபதி என்ற அடிப்படையில் அரசாங்கமாக முன்னிலையாகியுள்ளோம். சட்டமா அதிபர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல விடயங்கள் மற்றும் கருத்துக்கள் பரிமாற்றப்படுகின்றன. அனைத்துக்கும் பதிலளிக்க போவதில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் பற்றியும் சமூக வலைத்தளங்களில் பல விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றை கவனத்திற் கொள்ள வேண்டாம். சமூக வலைத்தளங்கள் எனக்கு பதவி வழங்கவில்லை. ஜனாதிபதி தான் என்னை நியமித்துள்ளார். எனது அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி தொடர்பில் முழுமையான நம்பிக்கை உள்ளது.
சட்டமா அதிபரினதும், சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் சுயாதீனத்தை நாங்கள் பாதுகாப்போம். இருப்பினும் சட்டவிரோதமான முறையில் எவரும் செயற்பட்டால் பாரபட்சமில்லாமல் உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம். எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. அனைவரும் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும் என்றார்.





