எல்லையற்ற அதிகாரம் எமக்கிருக்கிறது: ஞானசார தேரர்
ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாற்றமடையாத, யாராலும் கேள்வியெழுப்ப முடியாத எல்லையற்ற அதிகாரம் எமக்கு காணப்படுகிறது.
அரசியல்வாதிகளுக்கு கிடைப்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றமடையக் கூடிய தற்காலிக அதிகாரமாகும். ஆனால் சிங்கள பௌத்த பிக்குகளுக்கு கிடைத்திருப்பது 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட எவராலும் கேள்வியெழுப்ப முடியாத எல்லையற்ற அதிகாரமாகும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு நினைவில் கொள்ள வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ஷவின் நுகேகொடை கூட்டத்திற்கு மக்களை ஒன்று சேர்ப்பதற்காக இந்த பிரச்சினை உருவாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. அது உண்மையென்றால் அரசாங்கத்துக்கும் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையிலான ஒப்பந்தம் என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சர்ச்சைக்குள்ளாகியுள்ள திருகோணமலை கடற்கரையோரத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பொலிஸாரின் நடத்தை தொடர்பில் எமது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பொலிஸாரை இவ்வாறு வழி நடத்திய அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பினையும் நாம் இந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்திக் கொள்கின்றோம். இந்நாட்டில் சிங்கள பௌத்தர்கள் கள்ளத் தோணிகள் அல்ல. அனைத்து இன மக்களும் வாழக் கூடிய பாரம்பரியத்தை இந்நாட்டில் ஏற்படுத்திய பௌத்த மதம் இன்று இந்த அரசாங்கத்தின் கீழ் அவமானத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.
பௌத்தர்களின் வரலாறு பல முக்கிய புராண நூல்களில் எழுதப்பட்டிருக்கிறது. அவ்வாறான வரலாற்றைப் பதிவு செய்துள்ள பௌத்த பிக்குகள் மீது இன்று தாக்கப்படுகின்றனர். நல்லிணக்கம், மனித உரிமைகள் தொடர்பில் பேசுபவர்கள் இன்று எங்கு சென்றார்கள்? புனித இடமான அங்கீகரிக்கப்பட்டுள்ள சட்ட பூர்வ உரிமம் காணப்படுகின்ற ஒரு இடத்தில், அதனை சட்ட பூர்வமற்றது எனக் கூறி அகற்றுவதற்கு பொலிஸாருக்கு என்ன உரிமையிருக்கிறது?
பௌத்த பாரம்பரியங்களும், இடங்களும் சுவீகரிக்கப்படுவதன் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களே இருக்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இது தொடர்பில் பல விடயங்களைத் தெரிவித்திருக்கின்றார். 80 வயது கடந்த சம்பந்தன் கூட இவ்வாறு செயற்பட முன்வரவில்லை. பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டாலும், பிரிவினைவாத அரசியல் குழுக்கள் சாதாரண மக்களின் மனங்களில் அந்த விஷத்தைப் பரப்புகின்றன. திருகோணமலையிலுள்ள தமிழ் மக்கள் இதனை ஒரு பிரச்சினையாகக் கருதவில்லை.
அரசியல்வாதிகளே இவற்றை பாரிய பிரச்சினைகளாக உருவாக்குகின்றனர். பௌத்த பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டும் என பொறுப்புணர்வு சிறிதளவும் இந்த அரசாங்கத்துக்கு இல்லை. நல்லாட்சி அரசாங்கத்திலும் இதே நிலைமையே காணப்பட்டது. எந்தவொரு அரசியல் கட்சிக்கும், அரசியல்வாதிக்கும் ஆகக் கூடிய ஐந்தாண்டு காலமே அதிகாரம் கிடைக்கும். ஆனால் இந்நாட்டின் சிங்கள பௌத்த பிக்குகளுக்கு 2000 ஆண்டுகளுக்கும் அதிக அதிகாரம் காணப்படுகிறது. ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாற்றமடையாத, யாராலும் கேள்வியெழுப்ப முடியாத எல்லையற்ற அதிகாரம் எமக்கு காணப்படுகிறது.
இவற்றை நினைவில் கொண்டு செயற்படுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினரை எச்சரிக்கின்றோம். பௌத்தத்துக்கு எதிரான இவ்வாறான சம்பவங்களுக்கு இத்துடன் முற்றுப்புள்ளியிட வேண்டும். இதுவே இறுதி சம்பவமாக இருக்க வேண்டும். எந்த அச்சமும் இன்றி எமது பாரம்பரியத்தைப் பாதுபகாப்பதற்காக நாம் முன்னிற்போம். நாமல் ராஜபக்ஷவின் கூட்டத்துக்கு மக்களை சேர்ப்பதற்காகவே இந்த சம்பவம் இடம்பெற்றதாக அரசாங்கம் கூறுகிறது. அவ்வாறெனில் அரசாங்கத்துக்கும் நாமலுக்கும் இடையிலான ஒப்பந்தம் என்ன என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். அரசாங்கம் பணத்தை வழங்கி இவற்றை செய்திருக்கிறதா? அருண் ஹேமசந்திர மற்றும் சாணக்கியனுக்கு நாமல் எவ்வளவு வழங்கினார் என்று கேழுங்கள் என்றார்.





