டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: சுரேன் ராகவன்
டக்ளஸ் தேவானந்தா விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்குள்ளாகி தப்பிய ஒரு நபராவார். பூஸா முகாமிலும் அவர் பாரதூரமான தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றார்.
டக்ளஸ் தேவானந்தா விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்குள்ளாகி தப்பிய ஒரு நபராவார். எனவே அவர் மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது அவரது உயிருக்கு அச்சுறுத்தலாகும். அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் 29-12-2025 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், டக்ளஸ் தேவானந்தா விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்குள்ளாகி தப்பிய ஒரு நபராவார். பூஸா முகாமிலும் அவர் பாரதூரமான தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றார். இவ்வாறான நிலையில் அவரை மஹர சிறைச்சாலையில் தடுத்து வைத்திருப்பது அவரது உயிருக்கு ஆபத்தாகும். அவர் தவறிழைத்திருந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் அவருக்கான சகல பாதுகாப்பினையும் இந்த அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் தொடர்பில் நான் எவ்வித கருத்துக்களையும் கூற விரும்பவில்லை. அவரது அரசியல் கொள்கைகள் என்னுடைய அரசியல் கொள்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எவ்வாறிருப்பினும் அவர் மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது அவரது உயிருக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்பது எனது நிலைப்பாடாகும்.
அவர் பத்துக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சிகளால் குறிப்பாக விடுதலைப் புலிகளால் தாக்குதல்களுக்குள்ளாகி தப்பிய ஒரு நபராவார். மஹர சிறைச்சாலையில் சுமார் 1000 கைதிகளை மாத்திரமே தடுத்து வைக்க முடியும். ஆனால் தற்போது அங்கு சுமார் 3000 கைதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வாறான நெருக்கடியான சிறையில் டக்ளஸ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பொறுத்தமானதல்ல.
அவருக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்து நாம் கருத்தையும் முன்வைக்கவில்லை. ஆனால் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என்பதை வலியுறுத்துகின்றோம் என்றார்.





