துணிச்சலுடன் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராடுகிறது அரசாங்கம் - சர்வதேச நெருக்கடிக்குழு
கட்டமைப்பு ரீதியிலான மாற்றம்' தொடர்பில் துணிச்சலுடன் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அது இன்னமும் போராடி வருகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளைக் கைவிட்டதன் மூலம் இலங்கையின் பலவீனமான பொருளாதார மீட்சியைத் தக்கவைத்திருக்கின்ற போதிலும், 'கட்டமைப்பு ரீதியிலான மாற்றம்' தொடர்பில் துணிச்சலுடன் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அது இன்னமும் போராடி வருவதாக சர்வதேச நெருக்கடிக்குழு எனும் மனித உரிமைகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
'இலங்கையின் அரசியல் மாற்றத்துக்கான கரடுமுரடான பாதை' எனும் தலைப்பில் சர்வதேச நெருக்கடிக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கும் விரிவான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
ஆட்சிபீடமேறி சுமார் 18 மாதங்கள் நிறைவடையும் நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையின் பலவீனமான பொருளாதார மீட்சியைத் தக்கவைத்திருக்கிறது. இருப்பினும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றம்' தொடர்பில் துணிச்சலுடன் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அது இன்னமும் போராடி வருகிறது.
2022 ஆம் ஆண்டு நாடு முகங்கொடுத்த தீவிர பொருளாதார நெருக்கடியும், அதனைத்தொடர்ந்து ஆட்சியிலிருந்த ஜனாதிபதியையும் அவரது குடும்பத்தையும் பதவி கவிழ்த்த 'அரகலய' மக்கள் எழுச்சியுமே 2024 செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியைச் சாத்தியமாக்கியது.
அதன் நீட்சியாக பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி பெற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலம், நீண்டகால ஆட்சி நிர்வாக சவால்களை சீரமைப்பதற்கான ஓர் அரிய வாய்ப்பை உருவாக்கியது. குறிப்பாக இது ஜனாதிபதிவசம் குவிக்கப்பட்டுள்ள நிறைவேற்றதிகாரத்தை நீக்குதல், உயரதிகாரிகளின் குற்றப்பாதுகாப்பை ஒழித்தல் மற்றும் இனங்களுக்கு இடையிலான பிளவுகளை சீரமைத்தல் போன்றவற்றுக்கான வாய்ப்பாக நோக்கப்பட்டது. எனினும் இம்முக்கிய மறுசீரமைப்புக்களில் அரசாங்கம் மிக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான முன்னேற்றத்தையே எட்டியிருக்கிறது.
இந்நிலையில் பாரம்பரிய அரசியலில் இருந்து தாம் வேறுபட்டிருப்பதை நிரூபிப்பதற்கும், இழந்த வேகத்தை மீண்டும் அடைவதற்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும் கலாசாரத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வலுப்படுத்தவேண்டும். அத்தோடு போர்க்கால மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தல், அரசின் மீதான சுயாதீன கண்காணிப்பைப் பலப்படுத்தல் மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் என்பனவும் அவசியமாகும்.
2024 ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து நிவாரணம், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களின் ஊழல் குற்றங்களை முடிவுக்குக்கொண்டுவரல், சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்தல், இனப்பிளவுகளை ஏற்படுத்தும் அரசியல் கலாசாரத்தை முடிவுறுத்தல், நிறைவேற்றதிகாரத்தை நீக்கி புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரல் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
கடந்தகால அரசாங்கங்கள் மீதான அதிருப்தி மற்றும் ஏனைய தரப்புக்களிலிருந்து தாம் வேறுபட்டவர்கள் என்ற தேசிய மக்கள் சக்தியின் அடையாளம் என்பன மக்கள் மத்தியில் அவர்களை 'மாற்றத்துக்கான நம்பகரமான முகவர்களாக' மாற்றியது. இருப்பினும் 2025 மேமாதம் நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி 43 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. அதற்கு ஜனாதிபதித்தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளும் ஒரு காரணமாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் 'தித்வா' சூறாவளி போன்ற இயற்கைப் பேரனர்த்தம் மற்றும் தற்போதைய மத்திய கிழக்கு மோதல்கள் போன்ற வெளிப்புற அழுத்தங்களால் நாடு பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கிறது. இதனிடையே முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை கைவிட்டதன் மூலம் தேசிய மக்கள் சக்தி பலவீனமான பொருளாதார மீட்சியைத் தக்கவைத்திருக்கிறது.
அதேவேளை போர் பற்றியும், இன மற்றும் மத ரீதியிலான மோதல்களை தடுப்பதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பேசும் பேச்சுக்கள் ஒருபுறமிருக்க, போர்க்கால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான முதல் நகர்வை எடுப்பதே அவரது தலைமைத்துவத்துக்கான மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
அதேபோன்று தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய அரசியலமைப்பு உருவாக்கத்தைப் பொறுத்தமட்டில் தேசிய மக்கள் சக்தி அதன் அடிப்படைக்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (மக்கள் விடுதலை முன்னணி) நீண்டகால சிங்கள தேசியவாத வரலாற்றிலிருந்த விலகிச்செல்ல வேண்டியிருக்கும். மறுபுறம் பெரும்பான்மையின சிங்கள பௌத்த வாக்காளர்களின் எதிர்பார்ப்புக்களையும் அது முறையாகக் கையாளவேண்டியிருக்கும்.
இவ்வாறானதொரு பின்னணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது 'கட்டமைப்பு ரீதியிலான மாற்றம்' எனும் கோஷத்துக்குப் புத்துயிர் அளிப்பதற்கும், மாற்றத்துக்கான முகவர் என்ற நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் விரும்பினால், அது 'ஒழுக்கப் போதனை' செய்வதைக் குறைத்து, கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் செயன்முறையின் சுதந்திரத்தை வலுப்படுத்தவேண்டும்.
அதேபோன்று தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்குக்கு எதிரான தமது நிலைப்பாட்டை மீளுறுதிப்படுத்துவதற்கும், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும் மனிதப்புதைகுழி அகழ்வுகள் மற்றும் அதுகுறித்த குற்றவியல் விசாரணைகளுக்கு அரசாங்கம் ஆதரவளிக்கவேண்டும். அதுமாத்திரமன்றி ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.





