சிறை கைதிகள் படுகொலை செய்யப்படாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் - சத்தியலிங்கம் எம்.பி.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கைதிகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
வெலிகட சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட போது நடவடிக்கை எடுக்காதவர்கள் இப்போது நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றனர். இனியாவது நடவடிக்கைகளை எடுத்து எதிர்காலத்தில் சிறைக் கைதிகள் படுகொலை செய்யப்படாமல் இருப்பதை இந்த அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும் எனக்கு வந்தால் இரத்தம் உனக்கு வந்தால் தக்காளி சட்டினி என்ற கதையை போன்றே இப்போது சபையில் பேசுகிறார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 07-07-2026அன்று நடைபெற்ற தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கைதிகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோன்று 43 ஆண்டுகளுக்கு முன்னர் ஜுலை மாதத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொலை செய்யப்பட்டனர். அதேபோன்று 1997 டிசம்பர் 12ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் கொலை செய்யப்பட்டனர். அதேபோன்று பிந்துனுவெவ சிறைச்சாலையில் 2000ஆம் ஆண்டில் 27 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இப்போது நீர்கொழும்பில் இரண்டு கட்டமாக படுகொலைகள் நடந்துள்ளன.
இப்போது நீர்கொழும்பில் நடந்த இந்த படுகொலைகள் தொடர்பில் சபையில் அனைவரும் பேசுகிறார்கள். இதற்கு யார் பொறுப்பு கூற வேண்டும் என்று சொல்கின்றவர்கள். 43 வருடங்களுக்கு முன்னர் நடந்த படுகொலைகள் தொடர்பில் எவ்வித பதிலையும் கூறவில்ல. இந்த கொலைகளை யார் செய்தது? அவர்கள் கண்டு பிடிக்கப்பட்டனரா? அவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டனவா? அல்லது மீண்டும் நிகழாத வகையில் உறுதிப்படுத்தப்பட்டதா என்ற கேள்விகள் எங்கள் மத்தியில் எழுகின்றன.
வெலிகட சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட போது நடவடிக்கை எடுக்காதவர்கள் இப்போது நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றனர். இனியாவது நடவடிக்கைகளை எடுத்து எதிர்காலத்தில் சிறைக் கைதிகள் படுகொலை செய்யப்படாமல் இருப்பதை இந்த அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும் எனக்கு வந்தால் இரத்தம் உனக்கு வந்தால் தக்காளி சட்டினி என்ற கதையை போன்றே இப்போது கூறிக்கொண்டிருக்கின்றனர் என்றார்.





