வியட்நாம் ஜனாதிபதிக்கு பாராளுமன்றில் செங்கம்பள வரவேற்பு
வியட்நாம் ஜனாதிபதி 08-05-2026 அன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றுவதற்காக பாராளுமன்றத்துக்கு வந்த வியட்நாம் ஜனாதிபதி டோ லாமுக்கு முப்படை அணிவகுப்புடன் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.
வியட்நாம் ஜனாதிபதி 08-05-2026 அன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார். இவரின் வருகையை முன்னிட்டு பாராளுமன்ற சுற்றுவட்ட சந்தியிலிருந்து அவரின் படங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகள் கட்டப்பட்டும் , வியட்நாம்,இலங்கை தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டும் இருந்தன.
மிக நீண்ட வாகன பேரணியாக பாராளுமன்றத்திற்கு வருகை தந்த வியட்நாம் ஜனாதிபதிக்கு பாராளுமன்ற நுழைவாயில் பகுதியிலிருந்து வீதியின் இருபுறமும் முப்படையினரும் அணிவகுத்து நின்று மரியாதை செலுத்த அவர் பாராளுமன்றத்தை வந்தடைந்தார்.
அவரை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன,பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் வரவேற்று செங்கம்பள வரவேற்பளித்து அழைத்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் சபாநாயகருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் சிறியதொரு சந்திப்பு இடம்பெற்றது இதில் இலங்கை– வியட்நாம் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் அமைச்சர் தம்மிக பட்டபெந்திகே மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் பங்கேற்றனர். அதனைத்தொடர்ந்து வியட்நாம் ஜனாதிபதி பாராளுமன்ற விருந்தினர்களுக்கான விசேட புத்தகத்திலும் தனது குறிப்பை பதிவு செய்தார்
இதனைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு பாராளுமன்றம் கூடுவதற்கான கோரம் மணி ஒலிக்கப்பட்டு, 11,35 மணிக்கு சபாநாயர், மற்றும் செயலாளர் ஆகியோர் வியட்நாம் ஜனாதிபதியை சபை நடுவால் அழைத்துவந்து, சபாநாயகரின் ஆசனத்துக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த விசேட ஆசனத்தில் அமரச்செய்தனர்.
வியட்நாம் ஜனாதிபதியின் விசேட உரையை நேரடியாக கண்டுகளிப்பதற்காக கலரியில் வியட்நாம் தூதுக்குழுவினர்கள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் அமர்ந்திருந்தனர். அத்துடன் சபாநாயகரின் விருந்தினர்களாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, பிரதம நீதியரசர், அரச கணக்காய்வாளர் நாயகம் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் பலர் அமர்ந்திருந்தனர்.
அத்துடன் வெளிநாட்டு தூதுவர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள். முப்படைகளின் தளபதிகள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலரியில் அர்ந்திருந்துவியட்நாம் ஜனாதிபதியின் உரையை செவிசாய்த்துக்கொண்டிருந்தனர். அதேநேரம் ஆளும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் சபையில் அமர்ந்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து வியட்நாம் ஜனாதிபதியை வரவேற்று சபாநாயகர் உரை நிகழ்த்தியதனைத் தொடர்ந்து 11.40 மணியளவில் வியட்நாம் ஜனாதிபதி உரையை ஆரம்பித்து 12.05 மணிக்கு நிறைவு செய்தார். வியட்நாம் ஜனாதிபதி தனது உரையை தனது தாய் மொழியிலேயே உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து நன்றி உரையை பிரதமர் ஹரிணி அமரசூரிய நிகழ்த்தியதுடன் எதிர்க்கட்சிகள் சார்ப்பாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றினார். இதனையடுத்து சபை நடவடிக்கைகளை சபாநாயகர் நண்பகல் 1.30 தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்து, சபை நடவடிக்கையை 12,20 மணியளவில் ஒத்திவைத்தார். அதனையடுத்து வியட்நாம் ஜனாதிபதி பாராளுமன்ற வளாகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிநாட்டு அரச தலைவர் ஒருவர் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதலாவது சந்தர்ப்பமாக வியட்நாம் ஜனாதிபதியின் வருகை அமைந்திருந்தது. 2025ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் உரையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.





