சி.டி.விக்ரமரத்னவின் மரணம்: வழக்குப்பொருட்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த கடுவெல நீதிவான் உத்தரவு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேன பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான நிலையில் கடந்த ஜூலை 17 ஆம் திகதி முற்பகல் உயிரிழந்திருந்தார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டு காயம் காரணமாக உயிரிழந்த சம்பவத்தில், துப்பாக்கி சூட்டு காயம் ஏற்பட காரணம் என சந்தேகிக்கப்படும் 9 எம்.எம். ரக கைத்துப்பாக்கி, அதற்கான மெகசின் உள்ளிட்ட குற்றத்துடன் தொடர்புடைய அனைத்து வழக்குப்பொருட்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கடுவெல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மாலபே பொலிஸாரினால் இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பி 16426/2026 என்ற வழக்கு அமைய, மேல் மாகாண தெற்கு விசேட புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருந்த நிலையில் 20-07-2026 அன்று மீண்டும் மேற்படி வழக்கு கடுவெல நீதிவான் அருண இந்திரஜித் புத்ததாச முன்னிலையில் விசாரணைக்க எடுத்துக்கொள்ளப்பட்டப் போதே அவர் மேல் மாகாண தெற்கு விசேட புலனாய்வுப் பிரிவுக்கு இவ்வாறு உத்தரவிட்டார்.
அத்துடன், குறித்த வழக்குப்பொருட்களை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி, அது தொடர்பான இரசாயன பகுப்பாய்வு அறிக்கையினையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் இதன்போது மேலும் உத்தரவிட்டார்.
வழக்கு தொடுனரான மேல் மாகாண தெற்கு விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்கையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டு காயம் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதுவரை மாலபே பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளை, மேல் மாகாண தெற்கு விசேட புலனாய்வுப் பிரிவின் கீழ் பொறுப்பேற்று, மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 125 ஆவது பிரிவின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, மேல் மாகாண தெற்கு பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
அதிகாரிகள் தொடர்ந்து விடயங்களை முன்வைக்கையில், முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மரணம் தொடர்பில் மாலபே பொலிஸாரினால் இதுவரை காலம் முன்னெடுக்கப்பட்ட அனைத்து விசாரணைப் பணிகளையும் தமது பிரிவின் கீழ் பொறுப்பேற்பதற்கான அனுமதியை வழங்குமாறு அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.
மேல் மாகாண தெற்கு விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கடுவெல நீதிவான் அருண இந்திரஜித் புத்ததாச, முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மரணம் தொடர்பில் இதுவரை மாலபே பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை மேல் மாகாண தெற்கு விசேட புலனாய்வுப் பிரிவின் கீழ் பொறுப்பேற்பதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
துப்பாக்கி சூட்டு காயம் ஏற்பட காரணம் என சந்தேகிக்கப்படும் 9 எம்.எம். ரக கைத்துப்பாக்கி, அதற்கான மெகசின் உள்ளிட்ட குற்றத்துடன் தொடர்புடைய அனைத்து வழக்குப்பொருட்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் குறித்த வழக்குப்பொருட்களை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி, அது தொடர்பான இரசாயன பகுப்பாய்வு அறிக்கையினையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேன பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான நிலையில் கடந்த ஜூலை 17 ஆம் திகதி முற்பகல் உயிரிழந்திருந்தார். முன்னாள் பொலிஸ் மா அதிபரின் பூதவுடல் மீதான பிரேத பரிசோதனையை மேற்கொண்ட கொழும்பு கிழக்கு (முல்லேரியா) ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, பிரேத பரிசோதனையின் போது முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் குறிப்பிடாமல் திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இதற்கமைய, முன்னாள் பொலிஸ் மா அதிபரின் பூதவுடல் தொடர்பில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை, மரணத்திற்கான காரணங்களுடன் எதிர்வரும் தினமொன்றில் கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் கடுவெல நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





