பேரனர்த்தத்தினால் 374,000 தொழிலாளர்கள் பாதிப்பு
அடுத்ததாக விவசாயம் மற்றும் மீன்பிடி என்பன இந்நாட்டுப் பொருளாதாரத்தின் இரு பிரதான துறைகளாகும். மொத்த வேலைவாய்ப்பில் நான்கில் ஒரு பங்கானவை இவ்விரு துறைகளையும் சார்ந்தவையாகும்.
'தித்வா' சூறாவளியை அடுத்து ஏற்பட்ட பேரனர்த்தத்தினால் 244,000 ஆண்கள் மற்றும் 130,000 பெண்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 374,000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இத்தொழிலாளர்கள் முகங்கொடுத்திருக்கும் மாதாந்த வருமான இழப்பின் பெறுமதி 48 மில்லியன் டொலர்கள் எனவும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பேரனர்த்தத்தினால் தொழிலாளர்கள் மத்தியிலும், தொழிற்சந்தையிலும் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் தொடர்பில் மதிப்பீடு ஒன்றை மேற்கொண்டிருக்கும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம், அதனூடாகக் கண்டறியப்பட்ட அடிப்படைத் தகவல்கள் அடங்கிய பூர்வாங்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையின் பிரகாரம் 'தித்வா' சூறாவளியை அடுத்து ஏற்பட்ட பேரனர்த்தமானது 16 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியை அச்சுறுத்தல் நிலைக்குள் தள்ளியிருப்பதுடன், இதன் பெறுமதி சுமார் 16 பில்லியன் டொலர்களாகும். சமாந்தரமற்ற மீட்சி மற்றும் நீண்டகால பொருளாதாரச் சிதைவு என்பன இலக்கிடப்பட்ட நடவடிக்கைகள் ஊடாக சீரமைக்கப்படாவிடின், மேற்குறிப்பிட்ட அச்சுறுத்தல் நிலை மேலும் உயர்வடையும் என சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் அவ்வறிக்கையில் எச்சரித்துள்ளது.
அதேபோன்று அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 374,000 தொழிலாளர்கள் வசிப்பதாகவும், இதன் விளைவாக அவர்கள் தமது வாழ்வாதாரம் மற்றும் குடும்ப வருமானத்தை இழந்திருப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 244,000 ஆண்களையும், 130,000 பெண்களையும் உள்ளடக்கிய இத்தொழிலாளர்களின் மாதாந்த வருமான இழப்பு (மொத்தமாக) சுமார் 48 மில்லியன் டொலர்களாகும். துறை ரீதியாக நோக்குமிடத்து இவர்களில் 85,000 பேர் விவசாயத்துறை சார்ந்தும், 125,000 பேர் கைத்தொழில்துறை சார்ந்தும், 164,000 பேர் சேவைத்துறை சார்ந்தும் தொழில்களில் ஈடுபட்டவர்களாவர்.
அதன் தரவுகளின்படி நகர மற்றும் பகுதியளவில் நகரமயமாக்கம் அடைந்துள்ள பகுதிகளில் இயங்கிவந்த சிறிய மற்றும் நடுத்தரளவு முயற்சியாண்மைகள், ஆடையுற்பத்தி, வர்த்தகம், பழுதுபார்த்தல் சேவைகள் மற்றும் சிறியளவான உற்பத்தி நடவடிக்கைகள் என்பன வெகுவாகப் பாதிப்படைந்துள்ளன. இம்முயற்சியாளர்கள் அவர்களது தொழில் தளத்தை மாத்திரமன்றி, அத்தொழிலைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அவசியமான இயந்திர வசதிகளையும் இழந்திருப்பதனால் அவர்கள் பாரிய சவாலுக்கு முக்ஙகொடுத்துள்ளனர். நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப்பட்ட 29,600 நுண்ணளவு, சிறிய மற்றும் நடுத்தரளவு முயற்சியாண்மை வணிகங்கள் இப்பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், அவற்றில் 12,300 வணிகங்கள் நுண்ணளவானவையாகும்.
அடுத்ததாக விவசாயம் மற்றும் மீன்பிடி என்பன இந்நாட்டுப் பொருளாதாரத்தின் இரு பிரதான துறைகளாகும். மொத்த வேலைவாய்ப்பில் நான்கில் ஒரு பங்கானவை இவ்விரு துறைகளையும் சார்ந்தவையாகும். குறிப்பாக மத்திய மலைநாட்டில் மேற்கொள்ளப்படும் தேயிலைப் பயிர்ச்செய்கை மூலும் 2.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பதுடன், அத்துறையானது வருடாந்த ஏற்றுமதிகளில் 1.3 பில்லியன் டொலர் பங்களிப்பைக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் தற்போதைய பேரனர்த்தத்தினால் இத்துறை பரந்துபட்டளவில் பாதிப்படைந்திருக்கின்றது.
அதேவேளை ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் பிரகாரம் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் பகுதிகளில் 23 சதவீதமானவை வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் பேரனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் முறைசாரா தொழில்களில் ஈடுபடுவோருக்கு குறுகியகால உடனடி நிதியுதவிகள் வழங்கப்படவேண்டியது அவசியம் என சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது.





