படையினரை அகற்றாமல் வடக்குகிழக்கில் போதைப்பொருளை ஒழிக்க முடியாது: கஜேந்திரகுமார் எம்.பி.
எவ்வாறாயினும் இந்த அரசாங்கத்திற்கு போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தினரை முழுமையாக அகற்றாமல் அங்கு போதைப்பொருளை இல்லாதொழிக்க முடியாது. போதைப்பொருள் விநியோகத்துக்கும் பாதுகாப்பு தரப்புக்கும் இடையில் தொடர்புண்டு என்று அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிடுகிறார். அவ்வாறு தொடர்பில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் குறிப்பிடுகிறார்.
இளைஞர்களை திசைத்திருப்புவதற்காகவே வடக்கு,கிழக்கில் போதைப்பொருள் திட்டமிட்ட வகையில் விநியோகிக்கப்படுகின்றன. போதைப்பொருள் ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை சிறந்த முறையில் மேற்கொள்ளுங்கள் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
மாற்றத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் கீழ் மல்வத்துஓயா திட்டத்தில் சிங்கள மக்களை குடியேற்ற திட்டமிடப்படுகின்றது. சிங்கள மக்கள் வடக்கு , கிழக்கில் வாழ்வதில் எங்களுக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை. ஆனால் வடக்கு மற்றும் கிழக்கில் இனப்பரம்பலை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட செயற்பாடுகளை நாம் கடுமையாக எதிர்ப்போம் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 13-11-2025 அன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அமைச்சர் சந்திரசேகர் இந்த சபையில் உரையாற்றும் போது வடக்கு மற்றும் கிழக்கில் போதைப்பொருளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார். எவ்வாறாயினும் வடக்கு - கிழக்கில் இராணுவத்தினரால் போதைப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன இதனால் இராணுவத்தை அங்கிருந்து நீக்கும் வரையில் அங்கே போதைப் பொருளை இல்லாமல் செய்ய முடியாது.
இளைஞர்களின் போராட்டத்தை தடுப்பதற்கான உபாய மார்க்கமாகவே அங்கே போதைப்பொருள் திட்டமிட்ட வகையில் விநியோகிக்கப்படுகிறது. அந்த நிலைமை யுத்தம் முடிவடைந்தும் தொடர்கின்றது. இதனை நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்யாமல் அரசாங்கத்தின் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை முற்றுப்பெறாது. அமைச்சர் சந்திரசேகர் கடந்த பல வருடங்களாக யாழ்ப்பாணத்தில் வாழ்கின்றார். இதனால் அவருக்கு நான் கூறுவதை புரிந்துகொள்ள முடியுமாக இருந்திருக்கும்.
ஆனால் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அவ்வாறு இராணுவம் அதில் சம்பந்தப்படவில்லை என்று கூறியுள்ளார். மாவட்ட குழுக்கூட்டத்தில் போதைப் பொருள் தொடர்பான விடயங்களை நாங்கள் முன்வைத்துள்ளோம். இதில் இராணுவம் சம்பந்தப்பட்டுள்ளதாக அந்த கூட்டங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. ஆனால் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அவ்வாறு இல்லை என்று கூறுகின்றார்.
எவ்வாறாயினும் இந்த அரசாங்கத்திற்கு போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தின் தொடர்பை இல்லாமல் செய்யாமல் போதைப் பொருளை ஒழிக்க முடியாது. அது தெற்கிற்கும் பரவியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் புற்றுநோயாக உருவாகி இப்போது முழு நாட்டுக்கும் பரவியுள்ளது.
இதேவேளை இந்த வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு மாகாணம் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு தொடர்பில் குறிப்பிடப்பட்டதுடன் வீதி அபிவிருத்திக்காக நிதியும் ஒதுக்கப்பட்டது. அந்த நிதி போதுமானது அல்ல என்றும் கூறியிருந்தோம். ஆனால் இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் எதுவுமில்லை.
35 வருடங்களாக வடக்கு மற்றும் கிழக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்டது. அந்த மாகாண மக்கள் பொருளாதார தடைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.. 2001ஆம் ஆண்டில் ஒரு லீட்டர் பெற்றோல் விலை 2000 ரூபாவாகவே இருந்தது. விடுதலைப் புலிகளை காரணம் காட்டி சாதாரண தமிழ் மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாக இருந்தனர். இந்நிலையில் யுத்தத்திற்கு பின்னர் ஏதாவது அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கை ஏனைய மாகாணங்களில் இருந்து வித்தியாசமானது என்பதனை ஏற்றுக்கொண்டதா என்றால் இல்லை. கடந்த அரசாங்கங்கள் யுத்தத்திற்கு பின்னர் வடக்கு, கிழக்கில் பொருளாதார முன்னேற்றங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த அரசாங்கம் அவ்வாறு அல்ல. மாற்றத்திற்காக வந்தவர்கள் என்றே பார்க்கப்படுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாப்பவர்கள் என்றே கருதப்பட்டது. ஆனால் இந்த ஒரு வருடத்தில் அரசாங்கம் அவ்வாறு எதனையும் செய்யவில்லை.
கீழ் மல்வத்துஓயா திட்டத்தில் சிங்கள மக்களை குடியேற்ற திட்டமிடப்படுகின்றது. சிங்கள மக்கள் வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்வதில் எங்களுக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை. அவர்கள் எங்களுடன் ஒன்று சேர்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் வடக்குஇ கிழக்கில் இனப்பரம்பலை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட செயற்பாடுகளை எதிர்ப்போம்.
இதேவேளை நான்கு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட வேண்டும். ஆனால் அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதியில் ஒரு விமான நிலையத்திற்கு 250 மில்லியன் ரூபா போதுமா? யாழ்ப்பாண விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இது எந்த வகையில் போதுமானதாக இருக்கும்?
வடக்கில் 2500 வீடுகளை அமைப்பது தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு வீட்டுக்காக இரண்டு மில்லியன் ரூபா செலவாகும். இது வரவேற்கத்தக்கது. எனினும் இந்தியா 15000 வீடுகளை அமைப்பதற்கு தயாராக இருக்கின்றது. அது தொடர்பிலும் சிந்திக்க வேண்டும்.
முறைமை மாற்றத்திற்காக அதிகாரத்திற்கு வந்துள்ள அரசாங்கம் வடக்குஇ கிழக்கு மாகாணங்களுக்கும் ஏனைய மாகாணங்களுக்கும் இடையிலான இடைவெளிகளை புரிந்துகொள்ள வேண்டும். அந்த மாகாணங்களை மற்றைய மாகாணங்களை விட விசேட சிறப்பு மாகாணங்களாக கருதாத வரையில் அங்குள்ள மக்களை இந்த நாட்டை விட்டு வெளியேற கூறுவதை போன்றே இருக்கும். அங்குள்ள மக்களை வெளியேறும் வகையில் நிலைமைகளை உருவாக்குவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.
இலங்கை உண்மையான அபிவிருத்தியை அடைய வேண்டுமென்றால் தென்னிந்திய பொருளாதாரத்தை இலங்கையுடன் இணைக்க வேண்டும்.பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா தயாராக இருக்கின்றது. ஆனால் அரசாங்கம் அதற்கு தயாராக இல்லை. கடந்த அரசாங்கமும் இவ்வாறே நடந்துகொண்டது.
டுபாய், சிங்கப்பூர் போன்ற இடங்களில் இருந்து விமானங்கள் வரும் வகையில் அதனை அபிவிருத்தி செய்ய வேண்டும். இதனால் விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக இந்தியாவின் உதவியை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏன் அதனை ஏற்றுக்கொள்ளாமல் அந்த அபிவிருத்தியை தடுக்க வேண்டும்? பொருளாதார அபிவிருத்தியை செய்ய தென்னிந்தியாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பயணிக்க வேண்டும். அதற்காக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றார்.





