சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான சட்டம் இயற்றப்பட வேண்டும்: அமைச்சர் நளிந்த
சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று ஆளும் கட்சி பிரதம கொரடாவும் வெகுஜன ஊடக மற்றும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாட்டில் சகல துறைகளையும் உள்ளடக்கியதாக மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் பிரசார நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில், சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று ஆளும் கட்சி பிரதம கொரடாவும் வெகுஜன ஊடக மற்றும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 22-01-2026அன்று நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, ஆயுர்வேத உற்பத்திகள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் காணப்படும் போலியான விளம்பரங்கள் தொடர்பாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தர்மபிரிய திஸாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ஆயுர்வேத உற்பத்திகள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் மற்றும் அது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளின் பின்னர் நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் ஒழுங்குபடுத்தவும் முடியும்.
எவ்வாறாயினும் மக்கள் பாதிக்கப்படும் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியதாக சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான சட்டம் நாட்டில் இல்லை, அவற்றை இயற்றுவதன் மூலம் இவ்வாறான நிலைமைகளைக் கட்டுப்படுத்த முடியும். எனினும் தற்போது உள்ள சட்டங்களின் கீழ் கிடைக்கப்பெறும் முறைபாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.





