உயிரிழப்புக்கள் 607 ஆக அதிகரிப்பு; 20 இலட்சம் பேர் நிர்கதி
வெலிமட - ரேந்தபொல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களில் இருவரது சடலங்கள் மாத்திரமே மீட்கப்பட்டுள்ளன.
தித்வா புயல் நாட்டில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், உயிரிழப்புக்கள் சடுதியாக 607 ஆக உயர்வடைந்துள்ளன. அதேவேளை 214 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 20 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பகுதியாக மற்றும் முழுமையாக 71 669 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
05-12-2025அன்று வரை 20 மாவட்டங்களில் 607 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளனர். இவற்றில் அதிகளவான உயிரிழப்புக்கள் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன.
இம்மாவட்டத்தில் மாத்திரம் 232 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக நுவரெலியாவில் 89 பேரும், பதுளையில் 83 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் கண்டியில் 81 பேரும், நுவரெலியாவில் 35 பேரும், பதுளையில் 28 பேரும் காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை காலி மற்றும் திருகோணமலை தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களிலும் 4,164 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. சகல மாவட்டங்களிலும் 67, 505 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் 43 ,715 குடும்பங்களைச் சேர்ந்த 1,52, 537 பேர் 1,211 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
காணாமல் போனோரை தேடுவதில் நெருக்கடி
இயற்கை அனர்த்தங்களால் அதிகளவான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள கண்டி மாவட்டத்தில் கம்பளை - புப்புரெஸ்ஸ, ரஜதலாவை கிராமத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சுமார் 20 வீடுகள் தரைமட்டமாகியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். எனினும் நேற்று மாலை வரை மூவர் மாத்திரமே சடலங்களாக மீட்க்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு இடம்பெற்ற போது இரு இளைஞர்கள் அதனை அவதானித்து, அங்கிருந்தவர்களை காப்பாற்ற முயற்பட்ட போதிலும், 10 பேரை மாத்திரமே அவர்களால் காப்பாற்ற முடிந்துள்ளது.
மண்சரிவுகளுக்குள் சிக்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களை மீட்பதில் பெரும் சிரமமாகவுள்ளதாகவும், அரச தரப்பிலிருந்து இதற்காக போதுமானளவு ஒத்துழைப்புக்கள் கிடைக்கவில்லை என்றும் அந்த மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இதேபோன்று கம்பளை - குருஸ்ஸஹந்தி பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 11 பேர் காணாமல் போயிருந்தனர். நேற்றைய தினம் இராணுவத்தினருடன் பிரதேச மக்கள் இணைந்து முன்னெடுத்த மீட்பு பணிகளின் போது ஆண்கள் மூவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் வெலிமட - ரேந்தபொல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களில் இருவரது சடலங்கள் மாத்திரமே மீட்கப்பட்டுள்ளன.
மொரகஹாதென்ன நீர்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரிக்கும் சாத்தியம் தற்போது ஆரம்பித்துள்ள வடகிழக்கு பருவ மழையால் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் மொரகஹாதென்ன நீர்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நீர்மட்டம் ஆகக் கூடியளவு உயர்வடையும் பட்சத்தில் வான் கதவுகள் திறக்கப்படும் என்றும், இதனால் வான் பாயும் போது அம்பன்கங்கை மற்றும் மகாவலி கங்கைகளில் நீர்மட்டம் உயர்வடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





