வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம்
கியூ.ஆர். குறியீட்டைப் பயன்படுத்தி வாரத்தில் 7 நாட்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனக்கான கோட்டாவைப் பெற்றுக் கொள்ள முடியும்.
எரிபொருள் விநியோகத்தில் நிலவும் நீண்ட வரிசைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் (ஒற்றை, இரட்டை முறைமை) எரிபொருள் வழங்கும் புதிய நடைமுறை இன்று வியாழக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ்.டி எஸ். ராஜகருணா தெரிவித்தார்.
அடுத்த மாத இறுதிவரை தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று உறுதியளித்த அவர், இதுவரை கியூ.ஆர். குறியீட்டைக் கொண்டு எரிபொருளைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு இன்று மாத்திரம் இலக்க தகடு எண் தொடர்பில் கவனத்தில் கொள்ளாது எரிபொருள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
கொழும்பில் 18-03-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வாகனங்களை மாற்றியுள்ள அல்லது தொலைபேசி இலக்கங்களை மாற்றியுள்ளவர்களே கியூ.ஆர். குறியீட்டைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். தற்போது அந்த சிரமங்களை நிவர்த்தி செய்வதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
எவ்வாறிருப்பினும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அண்மித்து நீண்ட வாகன வரிசையை தொடர்ச்சியாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. கியூ.ஆர். குறியீட்டைப் பயன்படுத்தி வாரத்தில் 7 நாட்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனக்கான கோட்டாவைப் பெற்றுக் கொள்ள முடியும்.
எனவே நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லை. அனைவரும் தமக்கான கோட்டாவை ஒரே நாளில் பெற்றுக் கொள்ள நினைப்பதால் தான் வரிசை உருவாகிறது. ஒரு முறையான சுற்றின் அடிப்படையிலேயே எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுகிறது.
முற்பதிவு செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள், எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும். இரவு 10 மணிவரை எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் இயங்கும். அவை மூடப்படும் போது மறுநாளுக்கான 50 சதவீத இருப்பினை பேணுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த 50 சதவீத இருப்பும் முதல் நாளே நிறைவடைவதால், மறுநாள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இதனால் மறுநாள் எரிபொருள் வரும் வரை வாகனங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியேற்படுகிறது. எனவே ஒற்றை, இரட்டை இலக்கங்களின் அடிப்படையில் இனி எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதாவது வாகனங்களின் இலக்க தகடுகளில் இறுதி இலக்கம் பூச்சியம் மற்றும் இரட்டை எண்கள் எனில், இரட்டை எண்ணில் நிறைவடையும் தினத்திலும், இறுதி இலக்கம் ஒற்றை எண்கள் எனில், ஒற்றை எண்ணில் நிறைவடையும் தினத்திலும் எரிபொருளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைமையின் கீழ் கியூ.ஆர். குறியீட்டின் படி எரிபொருள் வழங்கப்படும். இதன் ஊடாக வரிசைகளைக் குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு கியூ.ஆர். குறியீட்டு பிரச்சினையால் இவ்வாரத்தில் இதுவரையில் எரிபொருளை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு நாளை (இன்று) இலக்கங்களை கவனத்தில் கொள்ளாது எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 28, 29ஆம் திகதிகளில் டீசல் கப்பலொன்று வரவுள்ளது. இன்று ஒரு கப்பல் வருகை தந்துள்ளது. இம்மாதம் முற்பதிவு செய்யப்பட்ட சகல கப்பல்களும் நாட்டை வந்தடைந்துள்ளன. எனவே அடுத்த மாத இறுதி வரை எரிபொருள் விநியோகத்தில் எவ்வித சிக்கலும் இருக்காது என நாம் உறுதியளிக்கின்றோம் என்றார்.





