ஐக்கிய அரபு அமீரக வாழ் இலங்கையர்களின் விபரங்களை சேகரிக்கும் விசேட திட்டம் இடைநிறுத்தம்
ஏற்பட்டுள்ள இந்த தற்காலிக தாமதங்களுக்காக வருந்துவதாகவும் இக்காலப்பகுதியில் பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இலங்கை பிரஜைகளுடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளைப் பேணுவதற்கும் அவர்களுக்குத் தேவையான நலன்புரிச் சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும் அவசியமான தகவல்களைச் சேகரிக்கும் விசேட செயற்திட்டமொன்றை அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பாக 03-09-2026 அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தினால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழில் நிமித்தமும் ஏனைய தேவைகளுக்காகவும் தங்கியுள்ள இலங்கை பிரஜைகள் தொடர்பான துல்லியமான தரவுகளை திரட்டுவதற்கு தூதரகம் தற்போது முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதன் மூலம் அமீரகத்தில் வாழும் இலங்கையர்களுடன் மிகவும் நெருக்கமான மற்றும் பாதுகாப்பான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றோம்.
இந்த விபரங்களைச் சேகரிப்பதற்கென இணையதளம் ஊடாக வழங்கப்பட்டிருந்த விண்ணப்பப் படிவத்திற்கான இணைப்பு தற்போது ஏற்பட்டுள்ள திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து இலங்கை பிரஜைகள் எவரும் குழப்பமடையத் தேவையில்லை. தொழில்நுட்பக் கோளாறுகள் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டவுடன் தரவுகளைப் பதிவு செய்வதற்கான புதிய இணைய இணைப்பு மிக விரைவில் தூதரகத்தின் உத்தியோகபூர்வ ஊடகப் பக்கங்களில் மீண்டும் வெளியிடப்படும்.
ஏற்பட்டுள்ள இந்த தற்காலிக தாமதங்களுக்காக வருந்துவதாகவும் இக்காலப்பகுதியில் பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அமீரகத்தில் உள்ள இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அவசர காலங்களில் அவர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளை தடையின்றி வழங்கவும் இவ்வாறான தரவு சேகரிப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.





