விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க
தரமற்ற நிலக்கரி கொள்வனவு விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும்.
தரமற்ற நிலக்கரி கொள்வனவு விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும். தற்போது சேவையில் உள்ள நீதியரசர்கள் தலைமையில் இந்த ஆணைக்குழு செயற்படும். 2019 ஆம் ஆண்டு முதல் கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பில் முழுமையாக விசாரிக்கப்படும். யார் சிறை செல்வார்கள் என்று அப்போது பார்க்கலாம். நிலக்கரி விவகாரம் குறித்து எதிர்க்கட்சியினர் தாராளமாக நீதிமன்றம் செல்லலாம், வழக்கு தாக்கல் செய்யலாம் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 10-04-2026 அன்று நடைபெற்ற வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சகல எதிர்க்கட்சிகளும் கைச்சாத்திடவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருசில உறுப்பினர்களும், ராஜபக்ஷ அணியினரும் மாத்திரம் தான் கையொப்பமிட்டுள்ளார்கள். குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் மூன்று பிரதான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்துக்குரிய நிலக்கரியை முறையாக கொள்வனவு செய்யும் பொறுப்பில் இருந்து அமைச்சர் விலகியுள்ளதாகவும், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரம் மற்றும் அமைச்சர் என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நிலக்கரி கொள்வனவுக்காக ஏற்றுக்கொண்ட பிரதான வழிமுறைகளை கடந்த 18 மாதங்களில் வலுசக்தி அமைச்சர் எவ்விடத்தில் மாற்றியமைத்தார் என்பதை எதிர்க்கட்சியினர் குறிப்பிட வேண்டும். நிலக்கரி நிறுவனம் 06 மாதத்துக்கு ஒருமுறை நிலக்கரி தொடர்பான கேள்வி திட்டங்களை தயாரிக்கும்.ஆகவே நிலக்கரி கொள்வனவு தொடர்பான தீர்மானத்தை வலுசக்தி அமைச்சரோ அல்லது வலுசக்தி அமைச்சோ எடுப்பதில்லை.
நிலக்கரி கொள்வனவுக்கான கேள்வி தரப்படுத்தல், சட்ட அங்கீகாரம் மற்றும் இறுதி அனுமதியளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து எவரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை.ஆகவே நிலக்கரி கொள்வனவு தொடர்பில் எதிர்க்கட்சியினர் நீதிமன்றத்தை நாடலாம், வழக்குத் தாக்கல் செய்யலாம்.நடைமுறைகளில் அமைச்சர் தலையிட்டார், முறைமைகளை தனது விருப்பத்துக்கு அமைய மாற்றியமைத்தார் என்றால் எதிர்க்கட்சியினர் அதனை ஆதாரபூர்வமாக முன்வைக்கலாம்.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு குறைவடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.முன்னாள் அமைச்சர் கெஹெலியவுடன் அமைச்சர் குமார ஜயகொடியை ஒப்பிட முடியாது. ஏனெனில் அரச நிதியை மோசடி செய்வதற்காக கெஹெலிய ரம்புக்வெல்ல மருந்து கொள்வனவு நடைமுறைகளை முழுமையாக மாற்றியமைத்து, அமைச்சரவையை தவறாக வழிநடத்தினார். ஆனால் குமார ஜயகொடி அவ்வாறு செயற்படவில்லை. நிலக்கரி கொள்வனவு நடைமுறையை மாற்றியமைக்கவில்லை. ஏனெனில் அரச நிதியை மோசடி செய்யும் அவசியம் வலுசக்தி அமைச்சருக்கு இருக்கவில்லை.
தவறு ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை தேட வேண்டும்.தவறு இடம்பெற்றுள்ளது. ஆகவே அமைச்சர் மோசடி செய்திருப்பார் என்று எதிர்கட்சியினர் கடந்த காலங்களை போன்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.நிலக்கரி ஊடாக மோசடி செய்வதற்குரிய எவ்வகையான வழிமுறைகளை வலுசக்தி அமைச்சர் உருவாக்கினார் என்பதை எதிர்க்கட்சியினர் குறிப்பிட வேண்டும்.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அரசாங்கத்தில் எவரேனும் ஊழல் மோசடியில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக முதலில் கட்சி மட்டத்தில் கடுமையாக நடவடிக்கைகளை எடுப்போம். எவரும் அதை சுட்டிக்காட்ட வேண்டிய தேவை கிடையாது. குறைப்பாடுகள் காணப்படுமாயின் எவராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம். எதிர்க்கட்சியினர் குறிப்பிடும் வரை பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம்.
தரமற்ற நிலக்கரி கொள்வனவு விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும். தற்போது சேவையில் உள்ள நீதியரசர்கள் தலைமையில் இந்த ஆணைக்குழு செயற்படும். 2019 ஆம் ஆண்டு முதல் கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பில் முழுமையாக விசாரிக்கப்படும். யார். சிறை செல்வார்கள் என்று அப்போது பார்க்கலாம். ஊழலுக்கு எதிராக மக்களுக்கு வழங்கி ஆணையை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றார்.





